மசோதா மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை மகளிர் 33% இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வராது: ப.சிதம்பரம் திட்டவட்டம்

காரைக்குடி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வராது என ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: சட்டமன்றம், நாடாளுமன்ற மக்களவையில் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மசோதா சட்டமாகி உள்ளதே தவிர அது அமலுக்கு வராது. இதில் வாணவேடிக்கை காட்டுகின்றனர். மாயாஜாலம் மாதிரி. 1996ல் முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிமுகம் செய்து வைத்த மசோதா இது. அதன்பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நிறைவேற்ற முயற்சி எடுத்தார். ஆனால் வெல்லவில்லை. பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் மசோதாவை நிறைவேற்றினார். அதே மசோதா, அதே வரைவு சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒப்புதல் தந்து இருந்தால் 2024 தேர்தலுக்கு அமலுக்கு வந்து இருக்கும்.

ஆனால் பாஜ அரசு விஷமத்தனமாக வேண்டும் என்றே இரண்டு தடைக்கற்களை வைத்துள்ளனர். ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு, மற்றொன்று தொகுதி மறுவரையறை. எனது கணக்கின்படி இச்சட்டம் 2029 தேர்தலுக்கும் வராது. இந்த மசோதா மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்கள். சேமிப்பு கணக்கு வட்டியை உயர்த்துவார்கள். ஏன் தக்காளி, வெங்காயம் விலையை கூட குறைப்பார்கள். வரும் தேர்தலில் பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு, இந்து, முஸ்லிம்களுக்கு இடையே பகைமை வளர்த்தல், மணிப்பூர் பற்றி எரிவது தொடர்பாக மக்களிடம் எடுத்து கூறுவோம். இந்தியா கூட்டணி தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

* தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்கள்
ப.சிதம்பரம் மேலும் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தந்துள்ளனர். மேலும் 10 முதல் 15 லட்சம் மகளிருக்கு தர முடிந்தால் மகிழ்ச்சியடைவேன். இது மிகச்சிறப்பான திட்டம். அதேபோல் அரசு பஸ்களில் மகளிர்க்கு கட்டணமில்லாத பயணம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பானவை’’ என்றார்.

The post மசோதா மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை மகளிர் 33% இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வராது: ப.சிதம்பரம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: