இன்று முதல் அமலுக்கு வருகிறது வந்தே பாரத் ரயிலுக்காக வைகை நேரம் திடீர் மாற்றம்: பயணிகள் கடும் அதிர்ச்சி

மதுரை: வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு சென்னை சென்றடையும். அலுவலக வேலையாக செல்லும் தனியார், அரசு ஊழியர்கள், பகல், இரவு நேரங்களில் அவசர வேலையாக செல்பவர்கள் உட்பட பலருக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. 46 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.

கடந்த 24ம் தேதி முதல் நெல்லையில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு அதிவேக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இந்த எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடத்தில் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே எந்த ரயிலும் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், மதுரையில் இருந்து செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தே பாரத் ரயிலுக்காக ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த நேர மாற்றம் இன்று(அக்.1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். வந்தே பாரத் ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் பயணிக்க முடியதாத நிலை உள்ளது. இந்த சூழலில் சாதாரண கட்டணம் உள்ள வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வேயில் இந்த திருத்தமானது ரயில் நேரங்களை மேம்படுத்துவதிலும், எக்ஸ்பிரஸ்களின் வேகத்தில் குறிப்பிட்டத்தக்க மேம்பாட்டிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. வைகை மட்டும் அல்ல. அனைத்து ரயில்களின் நேரமும் மாற்றப்பட உள்ளது. தென் மண்டல நேர அட்டவணையில் 11 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் ஒருங்கிணைப்பட்டு ஒரே சேவையாக இயக்கப்படுகின்றன. நேரம் மாற்றம் பயணிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டே செய்யப்பட்டுள்ளன. விரைவு ரயில்கள் வரும்போது, சில மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது’’ என்றார்.

* ரயில்களின் நேரம் மாற்றம்
ரயில்வே விடுத்துள்ள அறிக்கை: சென்னை – செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை – செங்கோட்டை இடையே இதுவரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தப் பகுதியில் இந்த ரயிலுக்கு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 9.55 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு 10 நிமிடம் முன்னதாக புறப்படும்.

மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும். மதுரை – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து காலை 7.25க்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும். மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20க்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும். மதுரை – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து அதிகாலை 4.05க்கு பதிலாக அதிகாலை 3.35க்கு 30 நிமிடம் முன்னதாக புறப்படும். இந்த கால அட்டவணை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

The post இன்று முதல் அமலுக்கு வருகிறது வந்தே பாரத் ரயிலுக்காக வைகை நேரம் திடீர் மாற்றம்: பயணிகள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: