அரசியல் கணக்கு

இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த முதல் கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான மசோதா முதன்முதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரத்தில் மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் இந்த மசோதாவை உயர்ந்த நோக்கத்துடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் அணுகியுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டு மசோதா இப்போது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டாலும் இதற்கான முன்னெடுப்புகள் பல ஆண்டுகளாக நடந்துள்ளது என்பதையும் இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

1996ம் ஆண்டு தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, 33 சதவீத இடஒதுக்கீட்டை முதன்முறையாக மக்களவையில் அறிமுகம் செய்தது. ஆனால் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் கலைக்கப்பட்டதால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. 1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. ஆனால் நிறைவேறாமல் போனது. 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இணைத்தது. 2008ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டத்துறை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து 2010ம் ஆண்டு அப்போதைய ஒன்றிய அமைச்சரவை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இப்படிப்பட்ட மசோதாவை கடந்த 9 ஆண்டுகளாக கண்டும் காணாமல் விட்ட பாஜ ஒன்றிய அரசு, தற்போது அதை நிறைவேற்றியுள்ளது. இதனை தேர்தலுக்கான அரசியல் கணக்காகவே அது பார்க்கிறது என்பது சர்ச்சை மட்டுமல்ல உண்மை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்றியிருப்பது அரசியல் நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் உள்ளிட்ட பெண்ணியத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அவ்வளவு சுலபமாக நிராகரித்து விட முடியாது என்பது அவர்கள் முன்வைத்துள்ள வாதம்.

மகளிருக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் நாரி சக்தி வந்தன் மசோதா என்பது 128வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவாகும். இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதன்பிறகு நாட்டில் உள்ள சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பை 2021ம் ஆண்டிலேயே நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி வரும் 2027ம் ஆண்டில்தான் மக்கள் தொகை கணக்ெகடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கடுத்த ஆண்டுகளில் இந்த மசோதா செயல்பாட்டுக்கு வரலாம்.
அந்த வகையில் வரும் 2029ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில்தான் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்பது சாத்தியமாகும் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ள தகவல்களே இதற்கான சாட்சியம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

The post அரசியல் கணக்கு appeared first on Dinakaran.

Related Stories: