ரஷ்யா விண்வெளி மையத்திற்கு சென்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள்..விண்வெளி கனவு நிறைவேறியதாக உற்சாகம்!!

சென்னை : ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து மாஸ்கோ புறப்பட்டுச் சென்றனர்.கொரோனா காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அவர்களது திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு கல்வி நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து செய்தன. அந்த வகையில் ராக்கெட் சயின்ஸ் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் தனியார் நிறுவனம் சார்பில் கடந்தாண்டு ஜனவரி 26ம்தேதி முதல் நடைபெற்றது.

பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். வினாடி வினா மற்றும் அறிவியல் படைப்புகளின் அடிப்படையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு 75 பள்ளி மாணவர்கள் தேர்வாகினர். அவர்களில் முதற்கட்டமாக 50 மாணவர்கள் இன்று அதிகாலை ரஷ்யா புறப்பட்டனர்.அவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஈ – கருணாநிதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். ரஷ்ய பயணம் தங்கள் விண்வெளி கனவுகளுக்கு நீர்வார்த்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ள இந்த அறிய வாய்ப்பிற்கு மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை ஆகியோருக்கும் அவர்கள் நன்றி கூறினர். ரஷ்யா சென்றுள்ள தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராக்கெட் ஏவுதளங்களை பார்வையிட உள்ளனர். மாணவர்களுடன் 10 அறிவியல் ஆசிரியர்களும் 10 ஒருங்கிணைப்பாளர்களும் ரஷ்யா சென்றுள்ளனர்.

The post ரஷ்யா விண்வெளி மையத்திற்கு சென்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள்..விண்வெளி கனவு நிறைவேறியதாக உற்சாகம்!! appeared first on Dinakaran.

Related Stories: