தஞ்சாவூர் அருகே போலீஸ் ஏட்டு தாக்கி மீன்வியாபாரி உயிரிழப்பு?

*உறவினர்கள் போராட்டம்

பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு தாக்கியதால் மீன் வியாபாரி இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் வீரையன் (53). மீன்வியாபாரியான இவரும், நண்பரான மறவக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேலும் நேற்றுமுன்தினம் மாலை டூ வீலரில் பழஞ்சூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.

பின்னர் ஊருக்கு திரும்ப முயன்றபோது டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் குணசீலன் என்பவர், வீரையனிடம் கள்ளச்சந்தையில் விற்பதற்காக மதுபாட்டில்களை வாங்கி செல்கிறீர்களா என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதோடு வீரையனின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. கழுத்தின் பின்பக்கத்தில் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் வீரையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து தலைமை காவலர் குணசீலன், வீரையனை பைக்கில் ஏற்றி வந்து அவரது மகன் முருகேசனிடம் (27) விட்டுவிட்டு சென்றார். மயக்க நிலையில் இருந்த வீரையனை, அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரையன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வீரையன் மகன் முருகேசன் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் நேற்று புகார் அளித்தார். இதற்கிடையே வீரையனின் உறவினர்கள், தலைமை காவலர் குணசீலன் தாக்கியதால் தான் வீரையனின் இறப்புக்கு காரணம் என்று கூறி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன் நேற்று பகல் 11.50 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏட்டு மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ₹50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. பிருதிவிராஜ் சௌகான் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிற்பகல் 1.15 மணியளவில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post தஞ்சாவூர் அருகே போலீஸ் ஏட்டு தாக்கி மீன்வியாபாரி உயிரிழப்பு? appeared first on Dinakaran.

Related Stories: