ஆசிய விளையாட்டுப் போட்டி: 8 தங்கம், 11 வெள்ளி உள்பட 31 பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 தங்கம், 11 வெள்ளி உள்பட 31 பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய வீரர், வீராங்கனைகள் மிகவும் எதிர்பார்த்த போட்டியில் பதக்கங்களை கைவிடாமல் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை பாலக் அசத்தியுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

232.6 புள்ளிகள் பெற்று பாலக் முதலிடமும், 229.2 புள்ளிகள் பெற்று ஈஷா சிங் 2ம் இடமும் பெற்றுள்ளனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து தங்கம், வெள்ளி வென்று சாதனை புரிந்து வருகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் 17 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 18 வயதான இந்திய வீராங்கனை ஈஷா சிங் இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். 8 தங்கம், 11 சில்வர், 11 வெண்கலம் என சுமார் 30 பதக்கங்களை இதுவரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

* ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில்இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈஷா, திவ்யா, பாலக் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. 3 நிலை கொண்ட 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றது. ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சுரேஷ், அகில் அடங்கிய குழு 1,769 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.

The post ஆசிய விளையாட்டுப் போட்டி: 8 தங்கம், 11 வெள்ளி உள்பட 31 பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா..!! appeared first on Dinakaran.

Related Stories: