வங்கக்கடல் பகுதியில் தென்தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக கடப்பாக்கம், சோழிங்கநல்லூர் 100மிமீ மழை பெய்துள்ளது. ஆரணி 90மிமீ, வாலாஜாபாத், வெம்பாக்கம், சென்னை 70மிமீ, பட்டுக்கோட்டை 60மிமீ, உத்திரமேரூர், கமுதி, ஆர்எஸ்மங்கலம், கலவை 50மிமீ, சென்னையில் கொளத்தூர், அம்பத்தூர், வானகரம், அண்ணா நகர், பெருங்குடி, செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம், பூந்தமல்லி 40மிமீ, மாமல்லபுரம், அயனாவரம், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், பெரம்பூர், புழல், ராயபுரம், முகலிவாக்கம், அடையாறு, தரமணி 30மிமீ மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்ப நிலை உணரப்பட்டது. தஞ்சாவூர், மதுரை, திருச்சி, பகுதிகளில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை, ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. அதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். சில நேரங்களில் 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.
