எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: அதிமுகவினர் சாலை மறியல்

திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையத்தில் கடந்த 1998ம் ஆண்டு ஆளுயர எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு கூண்டு அணிவித்து கட்சியினர் பராமரித்து வந்தனர். அண்மையில் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதையடுத்து இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி போஸ்டர் அடிப்பது, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து மீம்ஸ் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டு அவரது கையில் காவித்துண்டு ஒன்று கொடிபோல கட்டப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த சிலர் அதிமுகவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் தையூர் குமரவேல், நகர செயலாளர் முத்து, நிர்வாகிகள் மோகன், கணேசன், சேகர், சிவராமன், சுந்தரம், லவன், இளங்கோவன், குமரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இதையடுத்து திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாங்களே சிலையின் மீதுள்ள துண்டை அகற்றுவதாக கூறினர்.

இதுகுறித்து தலைமைக் கழகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும், அங்கிருந்து மறு உத்தரவு வரும் வரை எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். பின்னர் திடீரென ஓஎம்ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ருக்மாங்கதன், மங்களப்பிரியா ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரிடம் 2 பேர் சிலையின் பின்புறம் நின்றபடி காவித்துண்டுகளை கொடுத்து அனுப்புவதும் அந்த மனநோயாளி சிலையின் ஏணியில் ஏறி காவித்துண்டு அணிவித்து காவிக்கொடி கட்டுவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து மனநோயாளியிடம் காவித்துண்டு கொடுக்கும் இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: அதிமுகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: