தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 427 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகர்ப்புற சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. மேலும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு தாம் வசிக்கும் பகுதிகளிலேயே தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் லட்சக்கணக்கானோர் மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகின்றனர்.

இருப்பினும் சில இடங்களில் வசதி குறைபாடுகள், டாக்டர்கள், செவிலியர் வருகை தாமதம், சிகிச்சைக்கு நீண்ட நேரம் காத்திருப்பு, வேறு சில பிரச்னைகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டியை அமைத்து பராமரிக்கும்படி அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நம்பி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.

குறிப்பாக கர்ப்பிணிகள் வாரம்தோறும் பரிசோதணை செய்ய வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முறையான நேரத்திற்கு வருவது இல்லை. செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளிடம் கண்ணிய குறைவாக நடத்து கொள்வதாக புகார் வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்து புகார் அளிக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு பகுதியில் முக்கிய இடத்தில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். மருத்துவ அலுவலர்கள் அதைக் கண்காணித்து புகார் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும். உரிய நேரத்தில் அதன்மீது நடவடிக்கை எடுத்து குறைகளை களைதல் வேண்டும். புகார் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: