பசுமைப் புரட்சியின் தந்தை, நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

சென்னை: பசுமைப் புரட்சியின் தந்தை, நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பசுமை புரட்சியின் தந்தை எனவும் எம்.எஸ். சுவாமிநாதன் அழைக்கப்பட்டு வந்தார். அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, நெல் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்தவர்.நாட்டின் அரிசி, கோதுமை விளைச்சலை அதிகரிப்பதற்கான பசுமை புரட்சி திட்டங்களை செயல்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன். ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இந்நிலையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடியான காலத்தில் வேளாண்மையில் அவரது பணி பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்றியது . எம்.எஸ்.சுவாமிநாதனின் பணிகள் தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. புதுமையின் ஆற்றல் மையமாக, பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அழியா முத்திரையை பதித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர். கலைஞர் முதல்வராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கினார். நீடித்த உணவுப்பாதுகாப்புக்கு ஆற்றிய பங்களிப்பால் பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு, வேளாண் அறிவியலில் பல சாதனைகளை படைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வுகள் அளித்த பலன்கள் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

பசுமைப் புரட்சியின் தந்தை, நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.சுவாமிநாதன் எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

ஜெ.பி.நட்டா இரங்கல்

வேளாண்மையில் பல்வேறு ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு வேளாண்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு

டிடிவி தினகரன் இரங்கல்

உணவு உற்பத்தியில் இந்தியாவை ஒரு புதிய சகாப்தம் படைக்க செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்

ஜி.கே.வாசன் இரங்கல்

புதிய ரக அரிசி, கோதுமை வகைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

ராகுல்காந்தி இரங்கல்

இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் அர்ப்பணிப்பால் நாடு உணவில் தன்னிறைவு அடைந்தது. பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் எப்போதும் நாட்டு மக்களால் நினைவுகூரப்படுவார்.

The post பசுமைப் புரட்சியின் தந்தை, நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: