என்ஐஏ நடுநிலையை தவறிவிட்டது

கோவை, செப். 28: தேசிய புலனாய்வு முகமை நிறுவனம் தனது நடுநிலையை தவறிவிட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கோவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கூட்டாக நிருபர்களை நேற்று சந்தித்தனர்.

அப்போது நிருபர்களிடம் ஜவஹிருல்லா கூறியதாவது: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சமீபத்தில் என்ஐஏ அமைப்பு கோவையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் கோவையில் உள்ள அரபி கல்லூரியில் படித்ததால் அதே கல்லூரியில் அரபி கல்லூரியில் பயின்ற மாணவர்கள், வீடுகள் மாநகராட்சி கவுன்சிலர் முபசீரா வீடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் வந்த அதே தினத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை பறிமுதல் என பரபரப்பு ஏற்படுத்தினர். பொதுவாக மேல்நாட்டிற்கு வேலைக்கு சொல்வோர், இஸ்லாமியர்கள் அல்லாத பலரும் அரபி மொழியை பயின்று வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் பயின்றவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது போலவும், திமுக அரசுக்கு அவபெயரை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை தாக்குதலுக்கு பிறகு தேசிய புலனாய்வு முகமை உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சில குண்டு வெடிப்பு சம்பவங்களில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பு இல்லை என தேசிய புலனாய்வு முகாமை நிறுவனம் நிரூபணம் செய்தனர். ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய புலனாய்வு முகமை நடுநிலையை தவறிவிட்டது. நல்ல புலனாய்வு துறையாக இருந்து அவதூறுகளை கலைந்த நிறுவனமாக இருந்தது.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும். ஆனால் ஆதாரம் இல்லாமல் அரபு கல்லூரியில் படித்தவர்கள் என வீடுகளில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மிரட்டி நிர்பந்தம் செய்து தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். கோவை கார் குண்டு வழக்கில் அசாரூதீன் என்பவர் சேர்க்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ளவர் எப்படி கோவை கார் குண்டு வழக்கில் ஈடுபட்டார்?. அவரை வேறு வழக்கில் ஒப்புக்கொள்ள மிரட்டியுள்ளனர். முடியாது என கூறியதால் கோவை கார் குண்டு வழக்கில் சேர்த்துள்ளனர்.

தற்போது ஒன்றிய அரசு அமலாக்கதுறை, வருமான வரித்துறைபோல என்ஐஏவை பயன்படுத்துகிறது. என்ஐஏ தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை நிறுவனம் பழைய நிலைக்கு திரும்பும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசு 49 வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய முன்வந்துள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில், கவர்னர் கையெழுத்திட வேண்டும். அயோத்தி ரவி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் செய்தது குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய நபர்களை கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post என்ஐஏ நடுநிலையை தவறிவிட்டது appeared first on Dinakaran.

Related Stories: