ஒரு கிராமம் வளர்ச்சி அடைவதை பொறுத்துதான் இந்திய நாட்டின் வளர்ச்சியே இருக்கும் என்றார் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவரின் கூற்ைற மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படி ஒரு சிறப்பு திட்டம்தான் ‘ஊராட்சி மணி’.
பல மாநிலங்கள் சேர்ந்து ஒரு ஒன்றிய அரசு உருவாகுவது போல, பல உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவானதே ஒரு மாநிலம். எனவே, ஊரக மற்றும் நகர்ப்புறங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை மனதில் கொண்டுதான் திமுக ஆட்சி அமைந்ததும் ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை என 2 பிரிவுகளாக உள்ளாட்சித்துறை பிரிக்கப்பட்டது. இத்துறைக்கு தனித்தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் கிராமம் மற்றும் நகரங்களின் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பிரச்னைகளும் அரசின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தனர். தேர்தல் தோல்வி பயமே இதற்கு காரணமாக கூறப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்ததால் மக்களின் தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சுகாதாரப்பணிகள் முடங்கின. திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அபார வெற்றி கண்டது. சுணக்கமாக இருந்த உள்ளாட்சி பணிகள் வேகமெடுத்தன. வார்டுகள்தோறும் கவுன்சிலர்கள் வலம் வந்து தங்களுக்கான மக்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.
சுகாதாரம், கல்விக்கு தமிழ்நாடு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதற்கு நலத்திட்டங்களே சாட்சி.இருப்பினும், ஊரகங்களில் அடிப்படை தேவைகள் முழுவதுமாக பூர்த்தி செய்யப்படுகிறதா? அவர்களின் குறைகள் என்ன? இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் அற்புத முயற்சியாக ‘ஊராட்சி மணி’ என்ற சேவை அமைப்பினை தமிழக அரசு நேற்று துவங்கியுள்ளது. இதில் மக்கள் தங்களது குறைகளை 155340 என்ற எண்ணை இலவசமாக அழைத்து தெரியப்படுத்தலாம். ooratchimani.in என்ற வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. புகார்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்.
பொதுமக்கள் மட்டுமல்ல… உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி ஊழியர்களும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதன்மூலம் ஊரகப்பகுதிகளில் தேங்கி கிடக்கும் பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஊரக சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குக்கிராமங்களுக்கு கூட பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. நகர்ப்புறங்களோடு, கிராமங்களையும் வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறச் செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.
The post வளர்ச்சிப் பாதையில்… appeared first on Dinakaran.
