தமிழக முதல்வர் படத்திற்கு அவமரியாதை கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் பாஜவின் ஆதரவு பெற்ற ஒரு குழு காவிரி நீர் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய படத்தை வைத்து அவமரியாதை செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒழுங்காற்று ஆணையமும், உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு சொல்லியிருக்கிறார்களோ, அந்த தண்ணீரை நாம் கேட்கிறோம். பயிர்கள் கருகுகின்றன. தமிழக விவசாயிகள் சொல்லொணா துயரம் அடைகிறார்கள். ஆனாலும், தமிழக மக்களும், தமிழக விவசாயிகளும், தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் எல்லை மீறாமல் உணர்ச்சியை தூண்ட விடாமல் பொறுப்பான தன்மைகளோடு நம்முடைய கோரிக்கையை வைத்து வருகிறோம்.

ஆனால், கர்நாடகத்தில் வேறு விதமாக இருக்கிறது. இதேபோன்ற ஒரு நிலைமை கர்நாடகத்திலும் வர வேண்டும். கர்நாடக மாநில அரசு வன்முறையில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையும், பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் நடப்பது எளிது. ஆனால், இது ஒரு இறையாண்மையுள்ள தேசம். அதை கர்நாடகத்தில் உள்ள எதிர்கட்சிகள் பின்பற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் படத்திற்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தமிழக முதல்வர் படத்திற்கு அவமரியாதை கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: