காற்று மாசு, ஒலிமாசு ஏற்படுத்துவதாக புகார் பல்லாவரம் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடைக்கு சீல் வைக்க முயற்சி: ஊழியர்கள் திரண்டு வந்து அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு

சென்னை: காற்று மாசு, ஒலிமாசு ஏற்படுத்துவதாக புகார் வந்ததால் பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினம் ஜவுளி கடை நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றனர். அப்போது ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக திறக்கப்பட்ட இந்த கடையை சுற்றிலும் ஏராளமான நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்நிலையில், மின் இணைப்பு உள்ளிட்ட விதிமீறல்கள் அந்த கடையில் இருப்பதாக புகார்கள் எழுந்தது.

மேலும், கடையில் நான்கு ஜெனரேட்டர்களை உபயோகப்படுத்தி, கடைக்கு தற்காலிகமாக மின்சாரம் கொடுத்து, விற்பனையை தொடர்ந்து வந்தனர். தினமும் ஒரே நேரத்தில் ஏராளமான ஜெனரேட்டர்கள் ஓடியதால், காற்று மாசு, ஒலிமாசு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கடைக்கு நோட்டீஸ் வழங்கினர். அதற்கு சரவணா செல்வரத்தினம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து, கடையின் வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் குழு மற்றும் போலீசார் அந்த வணிகவளாகம் முன் காலையில் இருந்து மாலை வரை சுமார் 6 மணி நேரத்திற்கும் கோர்ட் தீர்ப்புக்காக காத்து நின்றனர்.

இதனிடையே நேற்று மாலை நீதிமன்ற உத்தரவு வந்ததில், மொத்தம் கடையில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களில் இரண்டினை மட்டுமே பயன்படுத்தவும், பயன்படுத்தாத மீதி 2 ஜெனரேட்டர்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும், அந்த உத்தரவில் கடையில் விதிமீறல்கள் இருப்பது குறித்தோ கடைக்கு சீல் வைப்பது குறித்தோ வேறு எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. அதனை சுட்டிக் காட்டிய கடையின் வக்கீல் குழுவினர், சர்ச்சைக்குரிய அந்த 2 ஜெனரேட்டர்களை உடனடியாக அகற்றுவதாக கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடைக்கு சீல் எதுவும் வைக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நேற்று காலை முதல் மாலை வரை கடைக்கு சீல் வைப்பது தொடர்பான பதற்றமான சூழ்நிலை பல்லாவரம் ரேடியல் சாலையில் நிலவியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post காற்று மாசு, ஒலிமாசு ஏற்படுத்துவதாக புகார் பல்லாவரம் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடைக்கு சீல் வைக்க முயற்சி: ஊழியர்கள் திரண்டு வந்து அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: