சாக்லேட் உருவான இனிப்பு வரலாறு!

அது கி.பி. 600 காலகட்டம். அமேசான் காடுகளில் தங்களது குட்டிகளுடன் சுற்றித் திரிந்த சில குரங்குகள் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாய் இருந்துள்ளன. இதைக் கண்ட அப்போதைய மனிதனுக்கு, சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்த குரங்குகள் ஏன் இன்றைய தினத்தில் இவ்வளவு குஷியாகின்றன? என்ற கேள்வியுடனே குரங்குக் கூட்டத்தைப் பின்தொடர்ந்திருக்கிறான். அப்போது அவன் கண்ட காட்சி அவனுக்குள் ஒரு பொறியை உருவாக்கி இருக்கிறது. உற்சாகமாக ஓடிச்சென்ற குரங்குகள், ஒரு மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து உடைத்து, பழத்தினுள் இருக்கும் சதைப்பகுதிகளை ருசித்துள்ளன. அந்தப் பழத்தின் கொட்டைகளை அரைகுறையாகக் கடித்துத் துப்பியிருக்கின்றன. பழங்களைத் தின்றபின் குரங்குகளிடம் மேலும் உற்சாகம் கூடியிருக்கிறது. இந்தப்பழத்தில் ஏதோ இருக்கிறது! என உணர்ந்த மனிதன், அந்தப் பழங்களைப் பறித்து உண்டு பார்த்தான். சதைப்பகுதி இனிப்பாகவும், விதைகள் லேசான கசப்புச் சுவையுடனும் இருந்தன.

அந்த வித்தியாசச்சுவை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. குரங்குகள் உற்சாகமாக ஏறிய அந்த மரம் கோகோ மரம். அவை ருசித்த பழம் கோகோ பழம். அவை கடித்துத் துப்பிய அந்த விதைகள்தாம், சாக்லேட் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான கோகோ பீன்ஸ். கோகோ விதைகளின் மகத்துவத்தை அறியாத அன்றைய மனிதன், குரங்கைப் போலவே பழத்தை மட்டும் தின்றுவிட்டு, அதன் விதைகளைத் துப்பிவிட்டான். பழத்தைக் காட்டிலும் கோகோ விதைதான் உற்சாகத்தைத் தரக்கூடியது என்று அப்போது அவன் உணரவில்லை. ஆனால், இதில் ஒரு நன்மையும் இருந்தது. மனிதன் துப்பிய விதைகளால் தென்அமெரிக்கக் கண்டத்தில் பல்வேறு இடங்களில் கோகோ மரங்கள் பல்கிப் பெருகின. சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த மத்திய அமெரிக்க நாகரிகமான மாயன் நாகரிகத்தில் கோகோ பீன்ஸ் புனித மான, கலாசார முக்கியத்துவம் நிறைந்த உணவுப் பொருளாக விளங்கி இருக்கிறது. அவர்கள், கடவுளுக்கு கோகோ பீன்ஸைப் படைத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களின் உடலோடு, ஒரு பானை நிறைய கோகோ பீன்ஸையும் சேர்த்துப் புதைக்கும் வழக்கமும் அவர்களிடம் இருந்திருக்கிறது. சோளம், மிளகாய், தேன், நிலக்கடலை போன்ற சில பொருள்களுடன் கோகோ விதைகளையும் கலந்து அரைத்து, கொதிக்க வைத்து, இனிப்பாக, காரமாக, கசப்பாக என்று விதம்விதமான சுவைகளில் உற்சாக பானமாக அருந்தியிருக்கிறார்கள். கோகோ விதைகளை மருந்தாகவும் பயன்படுத்தி யிருக்கிறார்கள். பதினாறாம் நூற்றாண்டுகளில் மெக்ஸிகோவின் முக்கிய இனமாக விளங்கிய அஸ்டெக் இனத்தவர்களும் மாயன்களைப் போல கோகோவைப் புனிதப் பொருளாகப் போற்றி இருக்கிறார்கள். அஸ்டெக் இனத்தவர்கள்தான் கோகோ விதைகளைப் பணமாகவும் மாற்றத் தொடங்கி உள்ளனர். கோகோ விதைகளை சந்தைக்கு எடுத்துச் சென்று, அந்த விதைகளைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக முயல், வான்கோழி முட்டை, தக்காளி என்று நினைத்ததை வாங்கி இருக்கிறார்கள். இப்படித்தான் கோகோ விதைகள் பணமாகவும் மாறத் தொடங்கியுள்ளது.கோகோ விதைகளைக் கொண்டு தயாரித்த பானங்களை சோகோல் (Xocol atl) என்று அழைத்திருக்கின்றனர். அதாவது, Xocol என்ற வார்த்தைக்குக் கசப்பு என்று அர்த்தம். atl என்றால் பானம்.

இதில் இருந்துதான் ஸ்பானிஷ் வார்த்தையான சாக்லேட்டல் உருவானது. இதிலிருந்துதான் தற்போது நாம் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தையான சாக்லேட் (Chocolate) வந்தது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை, மக்கள் சாக்லேட்டைப் பானமாகவே குடித்து வந்திருக்கிறார்கள். அதுவும் பெரியவர்கள் மட்டுமே. ஏனென்றால், அளவுக்கு மீறிய உற்சாகத்தைத் தரும் பானமாக இது இருந்ததால், குழந்தைகள் குடிக்கக்கூடாது என்று தடுத்துள்ளார்கள். பின்னர் பானம் திடவடிவில் சாக்லேட்டாக உருவானது. அதற்குப் பிறகுதான் அனைவரும் ருசிக்கும் பொருளாக மாறிஇருக்கிறது. ஒரு கோகோ பீன்ஸில் 50 – 60 சதவீதம் வரை திடப்பொருள் இருக்கும். 40 – 50 சதவீதம் வரை கொழுப்பு நிறைந்த கோகோ வெண்ணெய் இருக்கும். இந்த இரண்டையும் கொண்டுதான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. கோகோ விதைகளில் உள்ள கசப்புச் சுவைகொண்ட வேதிப்பொருள், காபியில் உள்ள காஃபினுக்கு இணையானது. இதுதான் சாக்லேட் சாப்பிட்ட உடனே நமக்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் கொடுக்கிறது.

இந்தியாவுக்குள் சாக்லேட் வந்த கதை:சாக்லேட்டின் சுவைக்கு அடிமையாகி இருந்த ஐரோப்பியர்கள், இந்தியாவை ஆட்சிசெய்த காலத்தில், அவர்களது தேவைக்காக சாக்லேட்டை இறக்குமதிப் பொருளாக இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் கேட்பரி சாக்லேட்டுகளின் இறக்குமதி மட்டுமே செய்யப்பட்டன. இதனால் இந்தியாவில் பணக்காரர்கள் மட்டுமே சாக்லேட்டை சுவைத்திருக்கிறார்கள். இந்நிலையில் கி.பி 1960-களில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநில மலைப் பிரதேசங்களில் கோகோ மரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளனர். பின்னர், இந்தியாவிலேயே சாக்லேட்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதன்மூலமே சாமனியர்களையும் வந்தடைந்திருக்கிறது சாக்லேட். தற்போது நம்மூர் பெட்டிக்கடைகளில் சாக்லேட் ஓர் இன்றியமையாத இனிப்பு. ஒரு ரூபாய் தொடங்கி, ஐந்து, பத்து ரூபாய்க்கு கூட பல்வேறு பெயர்களில் சாக்லேட் கிடைக்கிறது. குறைந்த விலைக்கு விற்கப்படும் சாக்லேட்களில் கலந்திருக்கும் கோகோவின் அளவு மிக மிகக் குறைவு, டார்க் சாக்லேட் (Dark chocolate) எனப்படும் கோகோ அளவு அதிகம் கலந்த, சற்றே கசப்புச் சுவையும் கொண்டவையே அசல் சாக்லேட் என்கிறார்கள் சாக்லேட் சாணக்கியர்கள்.

– தேவி குமரேசன்

The post சாக்லேட் உருவான இனிப்பு வரலாறு! appeared first on Dinakaran.

Related Stories: