ரெட்டியார்பாளையத்தில் குடோனில் பதுக்கிய 1 டன் பான்மசாலா போதை பொருட்கள் அதிரடி பறிமுதல்

புதுச்சேரி, செப். 27: ரெட்டியார்பாளையத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் மதிப்பிலான பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி நகர பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்மசாலா, குட்கா, பான்பராக் உள்ளிட்டவை கல்வி நிறுவனங்கள் அருகில் விற்கப்படுவதாக வந்த தகவலால் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார், இந்திரா காந்தி சதுக்கம் அருகே நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சாக்கு மூட்டையுடன் பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், போதை பொருட்களை கடத்தி வந்தது காமராஜர் நகரைச் சேர்ந்த சரவணன், லாஸ்பேட்டையைச் சேர்ந்த துளசிராமன் என்பதும், பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா, பான்மசாலா உள்ளிட்டவற்றை வாங்கி புதுச்சேரியில் உள்ள கடைக்கு விற்க வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில் குண்டுசாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சரவணன், துளசிராமன் மீது வழக்குபதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

வியாபாரிகள் கைது: இதேபோல் பெரியகடை காவல் சரகத்தில் பெட்டிக் கடைகள், பங்க் கடைகளில் சோதனை நடத்தியதில், அங்கு தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்றதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். வியாபாரிகள் லாஸ்பேட்டை பாலையன் (40), புதுசாரம் ஜெட்மால் (51), பிரகாஷ் (49), சண்முகசாமி (67) ஆகியோர் மீது வழக்குபதிந்து கைது செய்து எச்சரித்து விடுவித்தனர்.

The post ரெட்டியார்பாளையத்தில் குடோனில் பதுக்கிய 1 டன் பான்மசாலா போதை பொருட்கள் அதிரடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: