தீபாவளி சீட்டு நடத்தி ₹5 லட்சம் ஏமாற்றியவர் கைது

உளுந்தூர்பேட்டை, செப். 27: உளுந்தூர்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர்பவுல் (61). இவரது அண்ணன் ஆரோன். இருவரும் இதே கிராமத்தில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்த மரியதாஸ், அவரது மகன் அந்தோணி செல்வராஜ் ஆகியோரிடம் சீட்டு பணம் கட்டி வந்தனர். பணம் கட்டி முடித்த நிலையில் தங்களுக்கு தரவேண்டிய ரூ.5,19,000 பணத்தை கேட்டபோது தராமல் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து பீட்டர் பவுல் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், எறையூர் கிராமத்தை சேர்ந்த மரியதாஸ், அவரது மகன் அந்தோணி செல்வராஜ்(32) ஆகிய இருவரும் கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி பீட்டர்பவுல், ஆரோன் ஆகியோர் கட்டி முடித்த ரூ.5,19,000 பணத்தை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவர் மீதும் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மரியதாசை தேடி வருகின்றனர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி ₹5 லட்சம் ஏமாற்றியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: