கூட்டணி கட்சிகளை இழுப்பதில் போட்டா போட்டி அதிமுகவை உடைக்க அண்ணாமலை திட்டம்: டெல்லி அனுமதிக்காக காத்திருக்கிறார்

சென்னை: என்டிஏ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகியதால், அதிமுகவை உடைக்க அண்ணாமலை அதிரடி திட்டம் வகுத்துள்ளார். இதற்கான திட்டத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலிட உத்தரவுக்காக அண்ணாமலை காத்திருக்கிறார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு அதிமுகவின் பெரும் தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பாஜ மேலிடம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், இதுவரை அதிமுக பல மடங்காக உடைந்தபோது, ஒவ்வொரு அணியினரும் பாஜ தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை கூறி வந்தனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் போட்டிப்ேபாட்டு மோடி, அமித்ஷாவை சந்தித்தனர்.

இதனால் அவர்கள் எப்போதும் நம்மை அனுசரித்துதான் நடப்பார்கள். மேலும் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமியின் துறையில் ரூ.4800 கோடி முறைகேடு நடந்துள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், நம்மை மீறி செல்ல மாட்டார்கள் என்று மேலிடம் கருதியது. அதிமுக தலைவர்களை பாஜவின் ஒரு பிரிவினரைப் போலத்தான் கருதி செயல்பட்டு வந்தனர். நம்மை மீறி எங்கு சென்று விடப்போகின்றனர் என்று நினைத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு பாஜ தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஊக்கம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தோஷ் கொடுத்த தைரியத்தில், அதிமுகவை உண்டு இல்லை என்று பண்ண ஆரம்பித்தார் அண்ணாமலை. எல்லோரையும் கிண்டல், கேலி செய்ய தொடங்கினார். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றார். இதனால், புழுவை மிதித்தாலும் அது கடிக்கும் என்பதைப் போல தங்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆனால் பாஜ மேலிட நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தப் பூனையா பால் குடித்தது என்பதுபோல அதிர்ச்சியில் இருந்து விலகாதவர்களாக பாஜ தலைவர்கள் உள்ளனர்.

அதேநேரத்தில், சந்தோஷ் ஆலோசனைப்படி அதிமுகவில் வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், திருவாரூர் காமராஜ், வேலூர் வீரமணி ஆகியோருடன் மறைமுகமாக அண்ணாமலை தொடர்பு வைத்துள்ளார். இவர்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று ஏற்கனவே சந்தோஷ் திட்டமிட்டிருந்தார். இதனால் இவர்கள் அனைவரிடமும் அண்ணாமலை ரகசியமாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் உள்பட பல பாஜ ஆதரவாளர்களின் பட்டியலை அண்ணாமலை தயாரித்து வைத்துள்ளார். இதை தவிர கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அதிமுகவை உடைப்பது, கூட்டணியை தங்கள் பக்கம் இழுப்பது ஆகிய திட்டத்தை தயாரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், 2 நாட்களுக்கு பொறுமையாக இருக்கும்படி மேலிடம் அண்ணாமலையை கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமர்பிரசாத் ரெட்டி, வினோஜ் பி. செல்வம் ஆகியோரையும் மேலிடம் கண்டித்துள்ளது. அவர்களை உடனடியாக மன்னிப்பு கேட்க வைத்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில், ஓரிரு நாளில் முக்கிய முடிவுகளை பாஜ மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் திட்டப்படி அதிமுகவை உடைக்க மேலிடம் அனுமதி அளிக்குமா அல்லது அண்ணாமலையை மாற்றி விட்டு அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை தொடருமா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்கின்றனர் டெல்லி பாஜ தலைவர்கள். பாஜவில் இதுவரை மாநில தலைவர்களாக இருந்தவர்கள், மக்களுடன் பழகியதில்லை. தலைவர்களுடன்தான் பழகினர். இதனால் கட்சி வளராமல் போனது. ஆனால் அண்ணாமலை தலைவர்களுடன் பழகவில்லை. மக்களுடன் பழகுகிறார். இதனால்தான் பாஜவிலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் மக்களிடம் நல்ல பெயர் உள்ளதாக தேசிய தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலையை உடனடியாக மாற்றுவார்களா என்ற கேள்வியும் மேலிட தலைவர்களிடம் எழுந்துள்ளது. அதேநேரத்தில், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதால், எப்போது வேண்டுமானாலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் என்று சந்தேகிக்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது சொத்து பத்திரங்கள், பணம், நகை ஆகியவற்றை இப்போதே பதுக்க ஆரம்பித்து விட்டதாகவும், சிலர் பினாமிகளிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக- பாஜ கூட்டணி உடைந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் அமைதி காப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தங்களை தொடர்ந்து பாஜ உதாசீனப்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டார்.
* அதிமுகவில் வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், திருவாரூர் காமராஜ், வேலூர் வீரமணி ஆகியோருடன் மறைமுகமாக அண்ணாமலை தொடர்பு வைத்துள்ளார்.

The post கூட்டணி கட்சிகளை இழுப்பதில் போட்டா போட்டி அதிமுகவை உடைக்க அண்ணாமலை திட்டம்: டெல்லி அனுமதிக்காக காத்திருக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: