விருத்தாசலம், செப். 26: விவசாயியை அடித்து கொன்ற சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முஷ்ணம் அருகே உள்ள கொளத்தங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). விவசாயி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் அர்ச்சுனன் மகன்கள் ராமகிருஷ்ணன் (34), சுந்தரராஜன்(35) ஆகியோருக்கும் இடையே, இடப்பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 22-8-2021 அன்று ராஜேந்திரன் தனது மகளின் திருமணம் சம்பந்தமாக குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணன், சுந்தரராஜன் இருவரும் உங்கள் வீட்டு தென்னை மரத்தில் இருந்த தேங்காய் எங்கள் வீட்டில் வந்து விழுகிறது. மரத்தை வெட்டுங்கள் எனக் கூறி அவர்களை திட்டி தாக்கியுள்ளனர். அப்போது மேலும் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் ராஜேந்திரனின் தலை உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை உறவினர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திரனின் மகன் ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் முஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் வழக்கில் வாதாடி வந்தார். நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி பிரபாசந்திரன் வழக்கின் தீர்ப்பை வெளியிட்டார்.
சம்பந்தப்பட்ட இருவர் மீதும் கொலை குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் கொலை குற்றத்திற்காக தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மூன்று மாத சிறை தண்டனையும் மற்றும் அசிங்கமாக திட்டியதற்காக ரூபாய் ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 10 நாள் சிறை தண்டனையும், மேலும் ராஜேந்திரனின் தம்பி சேகரை திட்டி தாக்கியதற்காக ராமகிருஷ்ணனுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post விவசாயியை அடித்து கொன்ற சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.