நம்முடைய தனித்திறமை மூலம் மட்டுமே நாம் முன்னேற வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்தேன். அடிப்படையில் நான் ஒரு உணவுப்பிரியன். எங்க வீட்ல அம்மா செய்யும் உணவினை அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பேன். சில நாட்கள் நானே மார்க்கெட்டிற்கு சென்று சிக்கனை வாங்கி வந்து அம்மா சொல்லித் தருகிற பக்குவத்துல சமைப்பேன். முதலில் இப்படித்தான் சமைக்க ஆரம்பிச்சேன். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்னுடைய முதல் புட் ரிவியூவர். இப்ப உணவுத்துறையில் இருக்கிற எல்லாருக்குமே ருசியான உணவு தயார் செய்றத சொல்லித்தர முதல் குருநாதர்னா அது அவங்களோட அம்மாதான். எனக்கும் அப்படித்தான். ஐந்து வருடத்திற்கு முன்பு திருவான்மியூர்ல எங்களுடைய முதல் கடைய தொடங்கினோம். நண்பர் ஒருவர் மூலமாக பெசன்ட் நகர் பீச்சில் ஒரு இடம் கிடைத்தது. அதில் தற்போது கிரேஸி கிச்சன் உணவகத்தின் இரண்டவாது கிளையைத் தொடங்கி இருக்கேன். பொதுவாகவே பெரிய கடைகளுக்கு சென்று சாப்பிட வேண்டும் என்று பலருக்கும் தோன்றும்.
ஆனால் அதிக விலை இருப்பதால் அவர்கள் செல்வதற்கு தயங்குவார்கள். அதனால் பெரிய கடைகளில் கிடைக்கக்கூடிய உணவுகளை நம்ம ஸ்டைல்ல கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதுவும் நம்ம சென்னைக்கு ஏற்றபடி கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அதில் அனுபவமும் இருக்க வேண்டும். எனக்கோ உணவு செய்வதில் துவக்கத்தில் பெரிய அனுபவம் இல்லை. யூடியூப் சேனல்களை பார்த்துதான் ஒவ்வொரு டிஷ்சையும் செய்யக் கத்துக்கிட்டேன். எனக்கு தெரிந்த கிரிஸ்பி சிக்கன், ஒயிட் சிக்கன் பாஸ்தா, சிக்கன் பாப்கார்ன்னு இதோட சேர்த்து பல உணவுகளை நானே செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க தொடங்கினேன். எங்களது உணவகத்தைப் பொருத்தவரையில் ருசித்த அனைவரும் உணவில் இருக்கும் நிறை குறைகளை என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கூறிய குறைகளை மாற்றி, தயார் செய்த உணவினை அவர்களிடமே கொடுத்து ருசி பார்க்க சொல்வேன்.
செய்த டிஷ் அனைத்திற்கும் நல்ல ரிவியூ கிடைத்தது எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. எங்களது வெஜ், நான் வெஜ் ரெசிபிகளை ருசித்த வாடிக்கையாளர்கள் உணவின் ருசிக்காக கிரேஸி கிச்சனை தேடி வரத் தொடங்கினர். ஒரு டிஷ்சை சாப்பிட்டு செல்லலாம் என்று வருபவர்கள் உணவின் ருசிக்காக மற்றொரு டிஷ்சையும் ட்ரை பண்ணிடுவாங்க. அந்த அளவிற்கு தரமான ருசியில் பெர்ரி பெர்ரி சிக்கன், அனி சிக்கன், சிக்கன் பர்கர், தந்தூரி பர்கர், ட்ராகன் சிக்கன், க்ரீமி சிக்கன், வெஜ் நாச்சோஸ்னு எல்லா உணவுகளையும் எங்களுடைய யுனிக் டேஸ்ட்டில் கொடுத்து வருகிறோம். எல்லா உணவுகளையுமே நானே பார்த்து பார்த்து தயார் செய்கிறேன். எந்த விதத்திலும் டேஸ்ட் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே மெனக்கெடுகிறோம். கொரோனா காலகட்டதில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். குடும்பத்தில் இருந்தவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் அதில் இருந்து மீண்டு வந்தேன்.வெளிநாட்டு ஸ்டைல் ரெசிபிகளையும் நம்ம நாட்டு டேஸ்ட்டுக்கு மாற்றி கொடுக்கிறேன்.
ஒருசிலர் காரம் அதிகம் சாப்பிடுவார்கள். ஒருசிலரோ குறைவாகவோ அல்லது அளவாகவோ காரத்தை சேர்த்துக் கொள்வார்கள். நம்ம ஊரிலாவது உணவுகளை வேகவைத்து சாப்பிடுகிறோம். ஆனால் சைனா, ஜப்பான்னு பல நாடுகளில் மீன், காய்கறின்னு பல உணவுகளை சமைக்காமலே சாப்பிடுவார்கள். நாம் உணவுகளை சுட்டோ, அவித்தோ மட்டுமே சாப்பிடுவோம். எங்கு இருக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் உணவினை தயார் செய்து கொடுத்தால் போதும். வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வந்து சாப்பிடுவார்கள். உணவகத்தில் வேலை செய்யும் அனைவருமே என் குடும்பத்தை சார்ந்தவர்கள்தான். அண்ணா பாபு எனக்கு ரொம்ப உதவியா இருக்காரு. அவருடைய சப்போர்ட்தான் என்னை இன்று இரண்டு கடைகளுக்கு முதலாளியா மாத்தி இருக்கு. இப்ப ரெட் சாஸ் பாஸ்தா, ஒயிட் சாஸ் சிக்கன் பாஸ்தா, ரெட் சாஸ் சிக்கன் பாஸ்தா, மஸ்ரூம் சிக்கன், பின்க் சாஸ் சிக்கன் பாஸ்தா, சிக்கன் பார்பிக்யூ சான்விச், சீஸ் சிக்கன் சான்விச், கிரிஸ்பி சிக்கன் பர்கர், வெஜ் நாக்கெட் சான்விச், கார்ன் சான்விச், சீஸ் வெஜ் சான்விச் கொடுத்து வருகிறோம்.
அடுத்தது புதியதாக இப்போ பேமஸா இருகின்ற ஜப்பான் சிக்கனும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணோம். இதை எங்களது ரெகுலர் வாடிக்கையாளர்களிடத்தில் செய்து கொடுத்தோம். ஜப்பான் சிக்கனை ருசித்தவர்கள் அதன் ருசி ரொம்ப நல்லா இருப்பதாக சொன்னாங்க. அதனால் ஜப்பான் சிக்கனோட சேர்த்து இன்னும் புதுவிதமான 10 டிஷ்சை அடுத்த மாத துவக்கத்தில் லான்ச் செய்யப்போகிறோம். உணவகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நானும், அண்ணன் பாபுவும் சென்றுதான் வாங்கி வருகிறோம். பிரபலங்கள் பல பேர் இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். அப்படி வருபவர்கள் சில புதிய டிஷ்களை சமைத்து தர சொல்லி சாப்பிடுவார்கள். அந்த டிஸ் நல்ல ருசியில் இருந்தால் அதனை மற்ற வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் தரும் அபிப்பிராயத்தை கருத்தில் கொண்டு அந்த டிஸ்ஸை மெனு கார்டில் சேர்ப்பேன். உணவகத்திற்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் நாங்கள் உறவினர்கள் போலதான் பார்க்கிறோம். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உணவினை பார்த்து பார்த்து தயார் செய்கிறேன். ஓடி ஓடி உழைக்கும் அனைவரும் அவர்களுக்காக செலவு செய்வது என்றால் அது வயிற்றுக்கு மட்டும்தான். அதை கருத்தில் கொண்டுதான் உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் மன திருப்தியோடு சாப்பிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த உணவகத்தை இயக்கி வருகிறேன் என்று நெகிழ்ச்சியோடு கூறினார் ரோஹித் பாபு.
– சுரேந்திரன் ராமமூர்த்தி.
படங்கள்: தமிழ்.
சிக்கன் கிரிஸ்பி
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
முட்டை – 2
தயிர் – 1/2 கப்
மைதா மாவு – ஒரு கப்
கான்ஃப்ளார் மாவு – அரை கப்
சிறிய துண்டு இஞ்சி, 4 வெங்காயம், 10 பூண்டு பல் (அரைக்க)
இஞ்சி, பூண்டு, வெங்காயம் விழுது- 4 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 3 டிஸ்பூன்
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
சீரக தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எலும்பு இல்லாமல் கழுவி எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் போட்டு சிறிய துண்டு இஞ்சி, 10 பூண்டு பல், சேர்த்து விழுதாக அரைக்கவும். அந்தச் சிக்கனில் அரை கப் தயிர், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பவுலில் ஒரு கப் மைதா மாவு, அரை கப் கார்ன்ஃப்ளார் மாவு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கிளறி வைத்த கலவையோடு ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் அதே ஊறவைத்த சிக்கனில் ஒரு பிரட்டு பிரட்டி மீண்டும் அந்த கலவையோடு முன்புறம், பின்புறமாக கிளறி எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்தபின் மிதமான சூட்டில் ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
The post பெசன்ட் நகரைக் கலக்கும் பெர்ரி பெர்ரி சிக்கன்! appeared first on Dinakaran.
