பேட்டை : நெல்லை அருகே சுத்தமல்லி விலக்கு அம்பேத்கர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பழைய பிளாஸ்டிக் சாக்கு பைகளை சீரமைத்து தார்ப்பாய், பெரிய கோணிப்பை கார் கவர் போன்றவை தைக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பழைய பிளாஸ்டிக் பைகளை கொள்முதல் செய்து அவற்றை அங்குள்ள குடோனில் வைத்து தரம் வாரியாக பிரித்து அவற்றில் உள்ள பவுடர் கழிவுகள் கம்பெனி அருகே கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பவுடர் கழிவுகளில் இருந்து வெளியாகும் துர்நாற்றம் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் சுகாதார கேட்டால் மலேரியா, டெங்கு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தரம் வாரியாக மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள சாக்குப் பண்டல்களின் ஒட்டியுள்ள கழிவு உணவுப் பொருட்களை உண்ண வரும் எலிகள், பெருச்சாலிகள் குடியிருப்பு வாசிகளையும், குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. பெருச்சாலிகள் தொல்லையால் சிறியவர்கள் முதல் அனைவரும் அச்சத்தோடு நடமாடுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுத்தமல்லி காவல் நிலையம், பஞ்சாயத்து நிர்வாகம், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றில் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வரவிருக்கின்ற பருவமழை காலங்களில் தண்ணீர் தேங்கினால் துர்நாற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சுத்தமல்லியில் பிளாஸ்டிக் பவுடர் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.
