மஞ்சளில் பெருகும் மகசூல்!

இந்தியாவில் பயிரிடப்படும் வாசனைப்பயிர்களில் மஞ்சள் மிக முக்கியமானது. உலக உற்பத்தியில் 80 சதவீத மஞ்சள் இந்தியாவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது 6 சதவீத நிலப்பரப்பில் இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய பருவம் மஞ்சள் சாகுபடிக்கு உகந்த பருவம் என்பதால் நவீன ரகங்களைக் கொண்டு அதிக மகசூல் பெறுவதற்கு சில முக்கியமான தொழில்நுட்பங்களைக் கையாளலாம்.

மஞ்சள் ரகங்கள்

கோ – 1, பவானிசாகர் – 1, பவானிசாகர் – 2, கோ – 2 போன்ற ரகங்களில் இருந்து 30 – 32 டன்கள் பச்சை மஞ்சள், 250-280 நாட்களில் மகசூலாக பெறப்படுகிறது. மேலும் பிரபா, பிரதீபா, கேதாரம், ஆலப்புழை, சுப்ரிம் மற்றும் பிரகதி போன்ற ரகங்களில் இருந்து 35 டன்கள் பச்சை மஞ்சள், 180-210 நாட்களில் மகசூலாக பெறப்படுகிறது. இவை இந்தியாவில் உள்ள பல்வேறு வாசனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள் ஆகும். பொதுவாக மே – ஜூன் மாதங்களில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.தாய்க்கிழங்கு மஞ்சளை விதைப்பிற்காக தேர்வு செய்தால் எக்டருக்கு 2000 கிலோ தேவைப்படும். விரளி மஞ்சளாக தேர்வு செய்யும்பொழுது எக்டருக்கு 1500-2000 கிலோ தேவைப்படும். விதைக்கிழங்கினைச் சேமித்து வைக்கும்பொழுது மாங்கோசெப் (2கிராம்/ 1 லிட்டர் தண்ணீர்) என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தில் 30 நிமிடம் நனைத்து வைக்க வேண்டும். விதைக்கிழங்கினை அறுவடை செய்த 3 மாதம் இருப்பு வைத்தப் பின்னர்தான் நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடவின்போது தாய் மஞ்சள் மற்றும் விரளி மஞ்சளை தனியாகப் பிரித்து நடவு செய்யவேண்டும். நடவிற்கு மஞ்சளை உபயோகப்படுத்தும்போது மஞ்சளின் எடை 35 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும். நடவிற்கு கிழங்கு அழுகல் நோய் தாக்காத வயலில் இருந்து விதை மஞ்சளை எடுப்பது மிகவும் முக்கியம்.

விதைக்கும் முறை

விதை மஞ்சளை நடவிற்கு முன் காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது மாங்கோசெப் (3 கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) என்ற ரசாயன பூஞ்சாணக் கொல்லி மருந்தில் 30 நிமிடம் நனைத்து நடவேண்டும். அல்லது உயிரியல் முறையில் 1 கிலோ விதை மஞ்சளுக்கு டிரைக்கோடெர்மா விரிடி 5 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைப்பது அவசியம்.விதைப்பதற்கு முன்பு 1 மீட்டர் அகலம், தேவையான நீளம், 15 செ.மீ உயரமுள்ள மேட்டுப்பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மேட்டுப்பாத்திகளுக்கு இடையே 50 செ.மீ இடைவெளி இருத்தல் அவசியம். செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளியில், வரிசைக்கு வரிசை 45 செ.மீ என்ற இடைவெளியில் விதை மஞ்சளை 4 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

மஞ்சள் கிழங்கு முளைத்து வரும் வரை மிதமான நீர்ப்பாசனம் வாரம் ஒரு முறை செய்வது அவசியம். மழைக்காலங்களில் அதிகப்படியான நீர்த்தேங்குதல் கிழங்கு அழுகலை விரைவுப்படுத்தும். எனவே தக்க வடிகால் வசதி அமைத்துக் கொள்வது சிறந்தது. மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப சூழ்நிலையைப் பொறுத்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மஞ்சள் சாகுபடிக்கு அதிக அளவில் உரமிடுதல் அவசியம். நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் இடவேண்டும். கடைசி உழவின்போது 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 75 கிலோ பொட்டாஷ், 12 கிலோ இரும்பு சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை இடவேண்டும். மேலும் விதை மஞ்சள் நடும்பொழுது 1 ஏக்கர் நிலப்பரப்பிற்கு தலா 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 200 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். பசுந்தாள் உரம் மற்றும் வண்டல் மண் போன்றவற்றை இடுவதாலும் மகசூலை மேம்படுத்தலாம். விதைக்கிழங்கை நட்டவுடன் நிலப்போர்வை அமைத்தால் நல்ல பலன் கொடுக்கும். கிழங்கு நட்ட 45வது நாளில் 2வது முறையாக நிலப்போர்வை அமைக்க வேண்டும். நட்டவுடன் நிலப்போர்வை அமைப்பதால் ஈரப்பதம் சேமிக்கப்பட்டு, கிழங்குகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 டன் என்ற அளவில் நிலப்போர்வை அமைக்க எளிதில் மக்கக்கூடிய இலை, தழைகளைப் பயன் படுத்தலாம்.

இலைகள் கிடைக்காத பட்சத்தில் சணப்பை, பச்சைப்பயறு, குதிரை மசால், அகத்தி மற்றும் கொத்தவரை ஆகியவற்றின் விதைகளை வரப்புகளில் தூவி வளரவிட்டு, மழைக்காலங்களில் அதனை வெட்டி மண்ணுடன் உழுதுவிடவேண்டும். நடவு செய்த 30, 50, 90 மற்றும் 120வது நாளில் தலா 22 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். 30, 60, 90, 120 மற்றும் 150வது நாளில் தலா 75 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.மஞ்சளில் நுண்ணூட்ட குறைபாட்டினைத் தவிர்க்க தலா 150 கிராம் போராக்ஸ், இரும்பு சல்பேட், துத்தநாக சல்பேட் மற்றும் யூரியா ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கிழங்கு பிடிக்கும் சமயத்தில் 25 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். அல்லது கோழிக்கோட்டில் அமைந்துள்ள இந்திய வாசனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் நுண்ணூட்டக் கலவையினை இலை வழியாக, 1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

மஞ்சளானது பெரும்பாலும் தென்னைத் தோட்டங்களில் ஊடுபயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. நன்செய் நிலங்களில் நெல், கரும்பு, வாழை அல்லது காய்கறிப் பயிர்களுக்கு அடுத்து சுழற்பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சளுடன் ஊடுபயிராக சின்ன வெங்காயம், கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை போன்றவற்றை 10 செ.மீ இடைவெளியில் விதைக்கலாம், மேலும் துவரை மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்களை 15 – 20 அடி இடைவெளியில் விதைப்பு செய்யலாம். இவ்வாறு பல்வேறு முறைகளில் சாகுபடி செய்யும்போது முக்கிய பயிரில் கிடைக்கும் மகசூல் மட்டுமல்லாமல் ஊடுபயிர் வழியாகக் கிடைக்கும் மகசூல் மூலம் அதிக வருவாய் ஈட்ட ஏதுவாகும்.

அறுவடை

ரகத்தைப் பொறுத்து மஞ்சளானது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடையானது ஜனவரி – ஏப்ரல் வரை பல்வேறு இடங்களில் பின்பற்றப்படுகிறது. குறுகிய கால ரகங்கள் 7-8 மாதத்திலும், நடுத்தர ரகங்கள்
8-9 மாதங்களிலும் முதிர்வடையும். ஒரு ஏக்கருக்கு மகசூலாக பச்சை மஞ்சள் 10-12 டன்னும், உலர் மஞ்சளாக 2 – 2.4 டன்கள் வரையும் பெறலாம். எனவே மேலே குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் மஞ்சள்  சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

– முனைவர் சி.ஷர்மிளாபாரதி,
பேராசிரியர் (தோட்டக்கலை).
முனைவர் ம.விமலாராணி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
காளசமுத்திரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
செல்- 83009 78770.

The post மஞ்சளில் பெருகும் மகசூல்! appeared first on Dinakaran.

Related Stories: