கடலூர், செப். 25: கடலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் அகற்றப்பட்டது. அப்போது கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் புதுப்பாளையத்தில் படவட்டம்மன் கோயில் தெரு உள்ளது. இங்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் ஒன்று நடப்பட்டு, அதில் கட்சி கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இந்த கொடி கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக வருவாய் துறையினர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், தாசில்தார் ஆனந்த் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பத்தை அகற்ற முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் செந்தில், முன்னாள் கவுன்சிலர் பாவாணன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் அந்த இடத்திற்கு திரண்டு வந்து கொடி கம்பத்தை அகற்றக் கூடாது என்று கூறினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி கொடி கம்பத்தை எங்கும் வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பது தவறு. தற்போது கொடி கம்பத்தை எடுத்துவிட்டு அனுமதி பெற்ற பிறகு கொடி கம்பத்தை வைத்து கொள்ளுங்கள் என போலீசார் கூறினர். இதற்கு கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன் பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
The post விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் அகற்றம் appeared first on Dinakaran.