தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் 18 தானியங்கி சோதனை மையங்கள் பயன்பாட்டிற்கு வருகிறது: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு முதல் 18 தானியங்கி சோதனை மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களை இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் எப்சி என கூறப்படும் தகுதிச்சான்று கட்டாயம் பெற வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று மோட்டார் வாகன ஆய்வாளர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கனரக போக்குவரத்து வாகனங்களுக்கும், அக்.1ம் தேதி முதல் மற்ற வாகனங்களுக்கும் தானியங்கி சோதனை நிலையத்தின் மூலமாகவே தகுதிச்சான்று வழங்க வேண்டும் என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 18 வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 47 தானியங்கி சோதனை மையங்கள் அமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் 18 இடங்களில் சோதனை மையங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சாலைகளில் விபத்து ஏதுவும் ஏற்படாமல் தடுக்க வாகனங்கள் அனைத்து முறையான தகுதி பெற்று இருப்பது அவசியம். தகுதி இல்லாத வாகனங்களால் விபத்துகள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் சரியான முறையில் வாகனங்களை சோதிக்க தானியங்கி சோதனை மையங்கள் உதவும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் முகவர்கள் லஞ்சம் வாங்குவதைத் இந்த சோதனை மையங்கள் தடுப்பதுடன் தகுதி பெற்ற வாகனங்கள் மற்றும் இயங்குவதை உறுதி செய்யும். தமிழ்நாடு முழுவதும் 47 இடங்களில் தானியங்கி சோதனை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக 18 இடங்களில் தனியார் பங்களிப்புடன் சோதனை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனை மையங்கள் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம், திருப்பெரும்பதூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது உள்ள நடைமுறையுடன் ஒப்பிடும் போது தானியங்கி சோதனை மைங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் மனிதர்களால் எற்படும் தவறுகள் தவிர்க்கப்படுவதுடன், இடைத்தரகர்களின் தலையீட்டையும் தடுக்கும். இந்த சோதனை மையங்களில் ஆட்டோ, கார், பைக், பஸ் மற்றும் கனரக வாகங்களுக்கு என தனித்தனியாக 3 பாதைகள் அமைக்கப்படும். வாகனங்களை இயக்குவதற்காக அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படவுள்ளனர். அதற்காக விரைவில் டென்டர் விடப்படவுள்ளது.

ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்த தானியிங்கி சோதனை மையங்கள் பிரேக் அமைப்புகள், முகப்பு விளக்குகள், பேட்டரி, சக்கரங்கள், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் வேகம் காட்டும் மீட்டர்கள் உள்ளிட்ட 40 வெவ்வேறு அளவுகோள்களை சோதிக்கும். சோதனையின் முடிவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணித்து வாகனத்திற்கு தகுதி சான்று வழங்குவார். ஒருவேளை வாகனம் சோதனைகளில் தோல்வியுற்றால், வாகனத்தை தகுதியற்றது என்று அறிவிக்கப்படும். பின்னர் வாகன உரிமையாளர் 30 நாட்களுக்குள் மறுபரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். மீண்டும் வாகனம் தகுதி பெறவில்லை எனில் வாகனம் அழிக்கப்படும். வாகன உரிமையாளர்களிடமிருந்து சோதனைக் கட்டணத்துடன் கூடுதலாக, தகுதி சான்றிதழ் காலாவதியான பிறகு, தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

The post தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் 18 தானியங்கி சோதனை மையங்கள் பயன்பாட்டிற்கு வருகிறது: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: