தெலங்கானா, சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி… வெற்றி… வெற்றி!.. அடித்து சொல்கிறார் ராகுல்

புதுடெல்லி: வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அசாமின் பிரதிடின் மீடியா நெட்வொர்க்கின் வருடாந்திர மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:
தற்போது நாட்டின் முக்கிய பிரச்னைகள் பணவீக்கம், வருமான ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பின்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு எதிரான பெரும் அநீதி, விலைவாசி உயர்வு ஆகியவை தான். இவற்றை எதிர்த்து போட்டியிட முடியாது என்பதால்தான் பாஜ மக்களின் கவனத்தை பல வழிகளில் திசை திருப்பி முயற்சிக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை மாற்றுவோம், இவை எல்லாமே திசை திருப்பும் முயற்சி தான். பகுஜன் சமாஜ் தலைவர் டேனிஷ் அலிக்கு எதிராக பாஜ எம்பி ரமேஷ் பிதுரி மோசமான கருத்துக்களை தெரிவித்தது, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களின் அடிப்படை விசயம். அதை நாடே விரும்புகிறது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அந்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அதனால் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நாளை காலையில் இருந்தே கூட அமலுக்கு கொண்டு வரலாம். அதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால், அதானி விவகாரத்தில் பைனான்சியல் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் வெளியான செய்திகளில் இருந்து கவனத்தை சிதறடிக்கவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. முதலில் இதில் பாரதம் என நாட்டின் பெயரை மாற்றத்தான் உத்தேசித்திருந்தனர். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கையில் எடுத்துள்ளனர்.

இந்த தந்திரத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். கர்நாடகா தேர்தல் வெற்றி மூலம் பாஜவின் தந்திரத்தை முறியடிக்கும் சூட்சமத்தை நாங்கள் அறிந்துள்ளோம். அவர்கள் சொல்லும் எதையும் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே கர்நாடகாவில் கற்றுக்கொண்ட பாடத்தின் மூலமாக அடுத்து வரும் அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். தெலங்கானாவில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டோம். அங்கு பாஜ போட்டியிலேயே கிடையாது. மத்தியபிரதேசம், சட்டீஸ்கரில் எங்களது வெற்றி இப்போதே உறுதியாக உள்ளது. ராஜஸ்தானில் கடும் போட்டி இருந்தாலும், வெற்றிக்கு நெருக்கத்திலேயே நாங்கள் உள்ளோம். அங்குள்ள மக்கள் காங்கிரஸ் ஆட்சியை விரும்புகின்றனர். எனவே 2024 மக்களவை தேர்தலில் பாஜவுக்கு அதிர்ச்சிகரமான முடிவு நிச்சயம் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜவின் பிடியில் தேசிய ஊடகங்கள்
ராகுல் மேலும் பேசுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் தேசிய ஊடகங்களில் திரிபு இல்லாமல் செய்தியை வெளியிடுவதில்லை. அந்தளவுக்கு பாஜவின் பிடியில் ஊடகங்கள் சிக்கி உள்ளன. எனது யூடியூப் சேனல், டிவிட்டர் என அனைத்து தகவல்தொடர்பு அமைப்புகளும் நசுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மகாத்மா காந்தி போன்ற பழங்கால தலைவர்களை நினைவில் கொண்டு மிகப்பெரிய பாடத்தை பாரத் ஜோடோ யாத்திரை மூலம் கற்றுக் கொண்டேன். அவர்கள் என்னதான் ஊடகங்களை கையில் வைத்து எனது செய்திகளை திரித்து கூறினாலும், யாத்திரையில் நேரடியாக என்னை சந்தித்த மக்கள் உண்மையை உணர்ந்தார்கள். பாஜ ஊடகங்கள் ஜோடிக்கும் ஒவ்வொரு கதைக்கும் ஏராளமான மக்கள் உண்மை கதையை உணர்த்தினார்கள்’’ என்றார்.

The post தெலங்கானா, சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி… வெற்றி… வெற்றி!.. அடித்து சொல்கிறார் ராகுல் appeared first on Dinakaran.

Related Stories: