சென்னையில் நள்ளிரவு வரை பெய்த மழை; தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

நேற்றிரவு வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினம்பாக்கம், அடையாறு, மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் 11 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 4 செ.மீ., வேலூர் மாவட்டம் மேலாளத்தூரில் 6 செ.மீ., வேலூரில் 5 செ.மீ., காட்பாடி மற்றும் குடியாத்தத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு 26 மற்றும் 27ம் தேதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நள்ளிரவு வரை பெய்த மழை; தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: