தனியார் நிறுவன தொழிலாளி நெஞ்சுவலியால் திடீர் மரணம்

 

மேட்டுப்பாளையம், செப்.24: தேனி மாவட்டம், ஓடைப்பட்டி ரைஸ் மில் தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் (43). இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 1996 – 1999-ம் ஆண்டுகளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார். இந்நிலையில் உடன் படித்த நண்பர்களுடன் ஊட்டியில் 24-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நண்பர்கள் கிருஷ்ணகுமார் (42), முருகன் (43) மற்றும் சவித்ரு (42) உள்ளிட்டோருடன் கிருஷ்ணகுமாரின் காரில் நேற்று முன்தினம் மதியம் ஊரில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.

பின்னர், நேரமாகி விட்டதால் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். இரவு உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றுள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பாலகிருஷ்ணன் படுக்கையில் உட்கார்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அவரை தட்டி எழுப்ப முயன்றும் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தனியார் நிறுவன தொழிலாளி நெஞ்சுவலியால் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: