தர்மபுரியில் பரபரப்பு இரவில் சென்று விவசாயி வீட்டில் வங்கி கடனை கேட்ட அதிகாரிகள்: தட்டிக்கேட்ட வக்கீல் மீது சரமாரி தாக்குதல்

தர்மபுரி: தர்மபுரியில், இரவு நேரத்தில் விவசாயியின் வீட்டுக்கு சென்ற வங்கி அதிகாரிகள், வீடு கட்ட வாங்கிய கடனை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வக்கீலை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி அனிதா. இவர்கள் அரிஹரநாதர் கோயில் தெருவில், வீடு கட்டுவதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.24.40 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இதில் தவணையாக ரூ.18 லட்சம் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர். ஆனால் வங்கி நிர்வாகம், இன்னும் வட்டியுடன் சேர்த்து ரூ.32 லட்சம் செலுத்தும்படி கூறியுள்ளது.

கடனை செலுத்த முடியாமல் திணறிய விவசாயி கிருஷ்ணன், வக்கீல் காவேரிவர்மனிடம்(56) தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தர்மபுரி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வரும் 27ம்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள், கிருஷ்ணன் வீட்டிற்கு வந்து கடனை திருப்பிச் செலுத்தும்படி கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் வங்கி அதிகாரிகள் கிருஷ்ணன், அனிதா தம்பதியை மிரட்டியுள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த வக்கீல் காவேரிவர்மன், இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து கடனை கேட்கிறீர்கள், தற்போது இந்த கடன் தொடர்பாக, மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வங்கி அதிகாரிகள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்தவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின்படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தர்மபுரியில் பரபரப்பு இரவில் சென்று விவசாயி வீட்டில் வங்கி கடனை கேட்ட அதிகாரிகள்: தட்டிக்கேட்ட வக்கீல் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: