நெல்லை: மகளிருக்கான 33 சதவீத மசோதா நிறைவேற்றம் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக மோடி அரசின் நாடகம் என பாளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார். நெல்லை பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது: நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் உலகத்திலேயே ஐந்தாவது இடத்தில் பொருளாதாரத்தில் இந்தியா இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 நாட்டில் இந்தியா கடைசி நாடாக உள்ளது. உண்மையிலேயே நாட்டில் மக்கள் பெரிய அளவில் வேலை வாய்ப்பின்றி இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் பாஜ அரசு, ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருவதால், அவைகள் நாட்டு வளங்களை சுரண்டி வருகிறது. இதுபோல் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கைவினை கலைஞர்கள் என அனைவருமே பெரியளவில் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். ஜி-20 மாநாட்டில் மோடி பேசியது உண்மை இல்லை என்பதை எடுத்துக் கூற முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜ தெரிவித்து வருகிறது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க பல மாநில அரசுகளை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு மோடி அரசு முயற்சிக்கிறது.
தமிழகத்தில் 2024ல் நாடாளுமன்ற தேர்தலும், 2026ல் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தங்களது கையில் வைக்க ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜ கொண்டு வருகிறது. கர்நாடகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ தோல்வி அடைந்தது போல, வர இருக்கும் 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியடையும். கடந்த 10 ஆண்டுகளில் எதுவுமே செய்யாமல், நாடாளுமன்ற தேர்தலுக்காக 33 சதவீதம் மகளிர்களுக்கான மசோதாவை நிறைவேற்றி ஒன்றிய அரசு நாடகமாடுகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு இந்த மகளிர் மசோதா செயல்படும். இதனால் தற்போதைய மகளிர் மசோதா என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post 33 சதவீத மகளிர் மசோதா நிறைவேற்றம் நாடாளுமன்ற தேர்தலுக்காக மோடி அரசு நாடகம்: பிரகாஷ்காரத் பேச்சு appeared first on Dinakaran.
