கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறிய போலி ஸ்கேன் சென்டருக்கு சீல்

*உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலை * கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த போலி ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின்புறம் காட்டுக்கொட்டாய் பகுதியில் தனிநபர் ஒருவர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என பாலினம் தெரிவிப்பதாக சுகாதார துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நலக்குழுமம் பொறுப்பு அலுவலர் செந்தில்குமார், டிஎஸ்பி சரவணன், சென்னை மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்க நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்ய சென்றனர். இதனையறிந்ததும் ஸ்கேன் சென்டர் உரிமையாளரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேலு என்பவர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் நண்பருடன் தப்பி சென்று விட்டார். அவர் தப்பி செல்வதற்கு முன் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள உபயோகித்த ஸ்கேன் இயந்திரத்தை சேதப்படுத்தி தடயங்களை அழித்துவிட்டு சென்றுள்ளார். மேலும் ஸ்கேன் சென்டரில் உதவியாளராக பணிபுரிந்த சரசு என்பவரும் தப்பி சென்றுவிட்டார். இவரது வீட்டை ஸ்கேன் சென்டர் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார்.

விசாரணையில், தப்பியோடிய ஸ்கேன் சென்டர் உரிமையாளர் வடிவேலு மீது போலி மருத்துவராக செயல்பட்டதும், கருவிலுள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்தல், கருகலைப்பு போன்ற குற்ற வழக்குகள் வடிவேலு மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வடிவேலு மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சட்டவிரோதமாக ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட கட்டிடத்தை அதிகாரிகள் குழுவினர் மூடி சீல் வைத்தனர்.

ஆட்சியர் எச்சரிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் அல்லது தனிநபர்கள் கருவில் உள்ள கருவில் ஆணா, பெண்ணா என்பது குறித்து கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் எச்சரித்துள்ளார்.

The post கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறிய போலி ஸ்கேன் சென்டருக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: