இரு குழந்தைகளுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை: மதுரையில் சோகம்

வாடிப்பட்டி: மதுரை அருகே ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ், பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சிக்கு மாறுதல் ஆனதால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை தனது 11 வயது மகன், 9 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர் பகுதிக்குச் சென்ற ஜெயலட்சுமி, வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சமயநல்லூர் கிராமத்திற்கும், தேனூர் கிராமத்துக்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வழியாக திருச்சி நோக்கி சென்ற ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த மதுரை ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இரு குழந்தைகளுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை: மதுரையில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: