தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது; கனடா தனது நற்பெயரை காத்துக் கொள்ள வேண்டும்: இந்தியா கண்டனம்

காலிஸ்தான் தீவிரவாதி கொலை தொடர்பாக கனடா கூறும் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது என்று இந்தியா கண்டனம்டெல்லி: காலிஸ்தான் தீவிரவாதி கொலை தொடர்பாக கனடா கூறும் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசின் ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரியை அந்நாடு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் கனடா மூத்த தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான ‘விசா’ சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்குமாறு விசா சேவை மையங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கனடா உடனான பிரச்சனை குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி டெல்லியில் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர்; பாதுகாப்பு காரணங்களுக்காக கனடாவில் இருந்து இந்தியா வருவோருக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொலை தொடர்பான கனடாவின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது; இதற்கான ஆவணங்கள் எதையும் அந்நாட்டு அரசு தரவில்லை. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை விட, இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் அதிகம். இந்த எண்ணிக்கையில் ஒரு சமநிலை வேண்டும். இந்தியாவுக்கு எதிராக கனடா மண்ணில் நடக்கும் செயல்பாடுகள் தொடர்பாக நாங்கள் தகவல்களை கொடுத்துள்ளோம்.

கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது; கனடா தனது நற்பெயரை காத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது; கனடா தனது நற்பெயரை காத்துக் கொள்ள வேண்டும்: இந்தியா கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: