மேலும், மொராக்கோ நில நடுக்கம், லிபியா புயலில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்து ‘புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளர்.மக்கள் நலத்திட்டங்கள் தடைபட்டுள்ளது. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு ரூ.1000 வழங்குதல் மற்றும் காஸ் மானிய திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுபற்றி விரிவாக விவாதிக்க அனுமதி தர வேண்டும்’ எனக்கோரினர். அவர்கள் தொடர்ந்து பேச முடியாமல் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், நாக. தியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையை குறைந்தது 7 நாட்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததை கண்டித்து சுயேட்சை எம்எல்ஏ நேரு வெளிநடப்பு செய்தார். பின்னர் சபாநாயகர் செல்வம் சட்டசபையை காலவரையின்றி ஒத்தி வைத்தார். காலை 9.35க்கு துவங்கிய சட்டசபை 25 நிமிடம் நடந்தது. 10 மணிக்கு நிறைவடைந்தது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் செல்வம் தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் தமிழிசையை சந்தித்து புகார் கூறினர். பின்னர் வெளியே வந்த சபாநாயகர் கூறுகையில், தலைமை செயலர் உள்ளிட்ட சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கவர்னரிடம் எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தோம். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியதால் அமைதி காத்தோம். அதிகாரிகள் மீது முதல்வர் காட்டும் கனிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதுபோல் தொடர்ந்து கனிவு காட்டுவதால் பொதுமக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் நலன் பாதிக்கப்படுகிறது என முதல்வரிடம் தெரிவித்திருக்கிறோம். இந்த நிலை தொடரக்கூடாது என துணை நிலை ஆளுநரிடமும் புகார் தெரிவித்தோம். இனி எம்எல்ஏக்களுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதிகாரிகள் செயல்பாடு சரியாக இல்லையென்று சபாநாயகர் கூறினாலும், முதல்வர் ரங்கசாமி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல்வர் ரங்கசாமி கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜ திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், சபாநாயகர் தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் புகார் அளித்திருப்பது கூட்டணி ஆட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
* பாஜ எம்எல்ஏக்கள் திடீர் போராட்டம்
புதுச்சேரி மாவட்ட கலெக்டரை மாற்றக்கோரி சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து காளாப்பட்டு பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம், பாஜ ஆதரவு பெற்ற சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் செல்வம், இருவர் பிரச்னையையும் பேசி தீர்த்து வைக்கிறேன். வாருங்கள்.. என சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.
The post புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் சலசலப்பு முதல்வர் மீது கவர்னரிடம் பாஜ எம்எல்ஏக்கள் புகார்: சபாநாயகரை கண்டித்து திமுக, காங். வெளிநடப்பு; 25 நிமிடத்தில் முடிந்த சட்டசபை கூட்டத்தொடர் appeared first on Dinakaran.
