நீட் தேர்வு ரத்து கோரி அதிமுக கையெழுத்திடுமா? எய்ம்ஸ் எப்போது வரும் என்ற ரகசியத்தை உதயகுமார் கூறுவாரா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மேலூர்: எய்ம்ஸ் எப்போது வரும் என்ற ரகசியத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுவாரா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம், மேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது: நீட் தேர்வு குறித்த ரகசியத்தை என்னிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என்ற ரகசியத்தை உதயகுமார் கூறுவாரா? நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளோம். திமுகவின் இந்த கையெழுத்து இயக்கத்தில் உதயகுமார் பங்கேற்று கையெழுத்து போடுவாரா? தற்போது பாஜ – அதிமுக கூட்டணி பற்றி அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் பேசவில்லை. மாறாக தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

செல்லூர் ராஜூ ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணாவை, பெரியாரை பாஜவினர் தவறாக பேசியதற்கு திமுக குரல் கொடுக்கவில்லை என பேசியுள்ளார். ஆனால், பாஜவினருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதே செல்லூர் ராஜூக்கு, சனாதனம் பற்றி தெரியுமா? அவர் அதைப்பற்றி படித்துள்ளாரா? பிரதமர் மோடி ஒன்பதரை ஆண்டுகளில் என்னத்தை கிழித்து உள்ளார் என்று தெரியவில்லை. சாலை, காப்பீடு என அனைத்திலும் பாஜ அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. பாஜ அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே. தமிழகத்தில் பாஜ என்னும் பாம்பை ஒழிக்க வேண்டும் என்றால், அதிமுக என்ற குப்பையை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அருகே தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு டெபிட் கார்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்க பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

* காமெடி சேனல் போல் இருக்கு அதிமுக – பாஜ மோதல்
மதுரை அரசு மருத்துவமனையில், ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனம் உதவியுடன் அமையும் புதிய டவர் பிளாக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக – பாஜ இடையேயான இப்போதைய பிரச்னை எல்லாம் நாடகம். உள்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. ஓப்பனாகவே மிரட்டிக் கொள்கின்றனர். இதைப்பற்றி ஏதும் பேசக்கூடாது. ஒரு காமெடி சேனலை பார்ப்பது போலவே இதைப் பார்த்து விட்டு செல்ல வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு போய் பாருங்கள். செங்கல் மட்டும் தான் இருக்கும்’’ என்றார்.

The post நீட் தேர்வு ரத்து கோரி அதிமுக கையெழுத்திடுமா? எய்ம்ஸ் எப்போது வரும் என்ற ரகசியத்தை உதயகுமார் கூறுவாரா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: