அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கொரோனா நிவாரண திட்டம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கொரோனா நிவாரணை நிதியை விரிவுப்படுத்துவது தொடர்பாக ஆராயும்படி உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும், அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரை இழந்து அநாதையான குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின்கீழ் நிதிஉதவியை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம் குழந்தைகளுக்கு விரிவான பராமரிப்பு, பாதுகாப்பை வழங்குவது உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிவாரண நிதியுதவியை விபத்து மற்றும் பிற நோய்களால் பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த ஆதரவற்ற அனைத்து குழந்தைகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பெற்றோர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை பொருட்படுத்தாதீர்கள். பெற்றோர்கள் விபத்தில் இறந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் அந்த குழந்தைகளும் ஆதரவற்றவர்கள்தான். இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் இறப்புக்கான காரணத்தை கருத்தில் கொள்ளாமல் குழந்தைகளின் நிலைமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே கொரோனா தொற்றால் ஆதரவற்றவர்களாக மாறிய குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிவாரண நிதியுதவியை அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் விரிவுப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராயுங்கள்” என்று ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தினர்.

The post அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கொரோனா நிவாரண திட்டம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: