முதன்மையான திட்டம்

திமுக அரசு, தனது 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 என்ற திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நேற்று நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அண்ணா சொந்த ஊரான காஞ்சிபுரத்தில், 1.06 கோடி பேருக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான அறிவிப்பு, நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது வெளியிடப்பட்டது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்த 5 நாட்களில், அதாவது செப்டம்பர் 20ம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். இத்திட்டத்தில் ேதர்வு ெசய்யப்படாத விண்ணப்பதாரர்கள், மேல்முறையீடு செய்ய விரும்பினால், அவர்களது மொபைல் போனில் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

மகளிர் உரிமைத் திட்டம் 2 நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்தது ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதாகும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைகிறார்கள் என்பதைவிட, ஒரு கோடி குடும்பங்கள் பயனடைகின்றன என எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏழை, எளிய பெண்களுக்கு, யாரையும் எதிர்பார்க்க தேவையில்லாத பொருளாதார விடுதலையை இத்திட்டம் அளித்துள்ளது. மாதம் ஆயிரம் ரூபாயில் பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்து விடுவார்களா? என சிலர் விமர்சனம் முன்வைக்கிறார்கள்.

தன்னிறைவு என்பதைவிட, தங்கள் கைகளை நேரடியாக வந்து சேரும் இந்த பணம், பெண்களுக்கு நிச்சயம் உளவியல் ரீதியில் தன்னம்பிக்கையை தரும் என்பதே உண்மை. தங்களது சிறு செலவுக்காக, யார் கையையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை என்பது இன்னொரு சிறப்பம்சம் ஆகும். பெண்களுக்கென்று தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘கட்டணமில்லா பேருந்து’ திட்டத்தையும் சிலர் இப்படித்தான் ஆரம்பத்தில் விமர்சனம் செய்தனர். எதையும் அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே பார்க்கும் சிலர், நக்கலும், நையாண்டியுமாக கருத்து தெரிவித்தனர்.

பக்கத்து ஊருக்கு செல்ல, பத்து ரூபாய்கூட இல்லாத பெண்களுக்குத்தான் தெரியும் ‘கட்டணமில்லா பேருந்து’ திட்டத்தின் அவசியமும், தேவையும். இன்று, லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள் என்பதால் விமர்சனம் காற்றில் பறந்துவிட்டது. ‘கலைஞர் மகளிர் உரிமைத்’ திட்டமும் அப்படித்தான். தகுதியானவர்களை அடையாளம் கண்டு, முறையாக இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இது, நிச்சயம் பெண்களை தலைநிமிர வைக்கும் முதன்மையான திட்டம் ஆகும்.

The post முதன்மையான திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: