சிஏஜி அறிக்கையில் உள்ள ஊழலை மறைக்க சனாதனம் பேசி திசை திருப்பும் பாஜவை ‘இந்தியா’ தோற்கடிக்கும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரை: சிஏஜி அறிக்கையில் உள்ள ஊழலை மறைக்க சனாதனம் பேசி திசை திருப்பும் பாஜவை தோற்கடித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் மதுரையில் நேற்று நடந்த மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மதிமுக மாநில மாநாடு அண்ணா 115வது பிறந்தநாள் விழா மாநாடாக மதுரை அருகே வலையங்குளத்தில் நேற்று நடந்தது. மாநாட்டு திடலில் கட்சிக் கொடியை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஏற்றி வைத்தார். இம்மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்கும் பாஜவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் முயற்சியை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஓரணியில் சேர்ந்து முறியடிக்க வேண்டும். பாஜ அரசு 18 வகை குல தொழில்களை பட்டியலிட்டு வர்ணாசிரம முறையை நிலைநாட்ட முனைந்திருப்பதை திரும்ப பெற வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். கவர்னர் ஆர்.என்.ரவி நடைமுறையில் உள்ள பல்கலை. சட்ட விதிமுறைகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க மாநாடு வலியுத்துகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் இனவெறி தாக்குதலுக்கு முடிவு கட்டவும், உலக தமிழினம் இணைந்து தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐநா நடத்த உறுதியேற்க வேண்டும். சிஏஜி அறிக்கையில் உள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை மறைக்க சனாதனம் பேசி திசை திருப்பும் பாஜவை, இந்தியா கூட்டணி தோற்கடிக்க வேண்டும். ரேஷன் கடையில இறக்குமதி பாமாயிலை நிறுத்தி உள்ளுரில் உற்பத்தி ஆகும் தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை மதிமுக துணை பொதுச்செயலாளர் ஆவடி அந்தேரிதாஸ் வாசித்தார். பின்னர் பொதுச் செயலாளார் வைகோ உரையாற்றினார். மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவியை அகற்ற கோரிய கையெழுத்து இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பேருக்கு முதன்மை கழக செயலாளர் துரை வைகோ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

The post சிஏஜி அறிக்கையில் உள்ள ஊழலை மறைக்க சனாதனம் பேசி திசை திருப்பும் பாஜவை ‘இந்தியா’ தோற்கடிக்கும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: