திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு விஎச்பி முன்னாள் மாநில துணை தலைவர் மணியன் அதிரடி கைது: 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு; மாம்பலம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக விசுவ இந்து பரிஷத் முன்னாள் மாநில தலைவர் மணியனை மாம்பலம் போலீசார் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று காலையில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி வரை போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் கடந்த 11ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் துணை தலைவரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன்(76) கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கண்ணன் பிறப்பு குறித்தும், திருவள்ளுவர் பிறப்பு குறித்தும் மிகவும் ஆபாசமான வகையில் பேசினார். மேலும், பட்டியல் சமூகத்தினர் குறித்தும் பேசினார். அதோடு இல்லாமல் அம்பேத்கர் குறித்தும் அவதூறாக பேசினார். இது கூட்டத்தை பார்க்க வந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இரு சமுதாய மக்களுக்கிடையே மோதல் மற்றும் கலவரம் உண்டாக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, மாம்பலம் காவல் நிலையத்தில் சூளை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் வீடியோ ஆதாரத்துடன் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து ஆர்.பி.வி.எஸ். மணியன் மீது 5 சட்ட பிரிவுகள் கீழ் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதைதொடர்ந்து போலீசார் நேற்று அதிகாலை மாம்பலம் ராஜம்பாள் தெருவில் வசித்து வரும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணை தலைவரும், சொற்பொழிவாளரான ஆர்.பி.வி.எஸ்.மணியனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைதொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் ஆர்.பி.வி.எஸ்.மணியனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

தனியார் மருத்துவ சிகிச்சைக்கு கோரிக்கை
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு மணியன் ஆஜார்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான மனுவை சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் தாக்கல் செய்தார். பின்னர், மணியனிடம் உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, எனக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது என்றார். இதனையடுத்து, வரும் 27ம் தேதி வரை மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனிடையே, மணியனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ஆர்.சி.பாலகனகராஜ் கோரிக்கை விடுத்தார்.

The post திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு விஎச்பி முன்னாள் மாநில துணை தலைவர் மணியன் அதிரடி கைது: 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு; மாம்பலம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: