கடலூர் அருகே பரபரப்பு தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை சாவு?

கடலூர், செப். 14: கடலூர் அருகே தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை உயிரிழந்ததா? என்பது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.கே பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், விவசாயி. இவரது மனைவி சாந்தி பிரியா. இவர்களுக்கு தஷ்விக் ராஜ் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. சாந்தி பிரியா கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் சாந்திபிரியா தனது மகனை அழகியநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் சாந்திபிரியா குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தஸ்விக்ராஜுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால், குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் அருகே பரபரப்பு தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை சாவு? appeared first on Dinakaran.

Related Stories: