திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து 41 பயணிகள் உயிர் தப்பினர்

திண்டிவனம், செப். 14: திண்டிவனம் அருகே நேற்று அதிகாலை அரசு விரைவு பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 41 பயணிகள் உயிர் தப்பினர். மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்து நேற்று அதிகாலை சென்றது. பேருந்தை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பாம்பு விழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் (42) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் நடத்துநராக காஞ்சிபுரம் மாவட்டம் இடையன்புதூர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (37) சென்றுள்ளார். 41 பயணிகளுடன் பேருந்து, திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி பேருந்தை உரசியபடி சென்றது.

உடனே ஓட்டுநர் விபத்தை தவிர்ப்பதற்காக பேருந்தை இடதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இதில் 41 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்த பயணிகளுக்கு திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்தை ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து 41 பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: