ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி 24ம் ஆண்டு தொடக்க விழா: நடிகர் தம்பி ராமையா பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 24ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ்.கே.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஏ.ஆர்.பிரபாகரன், செயலாளர் ஜி.ஸ்ரீகாந்த், பொருளாளர் ஜி.பாலசுப்பிரமணியம், இணை செயலாளர் டி.எஸ்.விஷ்ணு, துணைத் தலைவர் இ.கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனி அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் திரைப்பட நடிகர் தம்பி ராமையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் தங்களை தாங்களே நேசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தினமும் கண்ணாடி முன்பு நின்று தான் நல்லவரா? நம்மை நாமே நேசிக்கலாமா? அந்த அளவுக்கு நம்முடைய செயல்கள் உள்ளதா என கேட்க வேண்டும். அப்போது அவர்கள் தீய செயல்கள் செய்து இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.

அதை தவிர்த்தால்தான் நாம் நல்லவர்கள் என உணர முடியும். ஆகையால் அனைவரும் தங்களை தாங்களே முதலில் நேசிக்க வேண்டும். அதற்கு பின்னர் உலகமே உங்களை நேசிக்கும் அளவு உயர முடியும் என்றார். மேலும், கல்லூரி பருவம் என்பது 4 ஆண்டுகள். வெறும் 4 ஆண்டு காலம் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் வெற்றியாளர்களாகவும், சாதனையாளர்களாகவும் மாறி இதுபோல் மேடை ஏறி உங்களது சாதனைகளை நீங்களே மற்றவர்களுக்கு கூற முடியும். ஆகையால் இந்த 4 ஆண்டு காலத்தை நீங்கள் திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

The post ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி 24ம் ஆண்டு தொடக்க விழா: நடிகர் தம்பி ராமையா பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: