‘இந்தியா’ நாட்டின் பெயர் ‘பாரத்’ என மாற்றம் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்: ஐக்கியநாடுகள் சபை தகவல்

ஐநா: ‘இந்தியா’ நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்வது தொடர்பாக கோரிக்கை வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒரே நோக்கத்தில் திமுக. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரால் அச்சமடைந்துள்ள மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு ‘இந்தியா’ பெயர் குறித்து அவதூறு விமர்சனங்களை முன்வைத்து வருவதால் பாஜவினர் தற்போது இந்தியாவின் எதிரிகளாக மாறி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இதுவரை இந்தியா என்றழைக்கப்பட்டு வந்த நாட்டின் பெயரை பாரத் என மாற்ற பாஜ முயற்சி செய்து வருகிறது. டெல்லியில் நாளை நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசு தலைவர்‘ என்பதற்கு பதிலாக ‘பாரத நாட்டின் குடியரசு தலைவர்‘ என்று அச்சிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்தோனேஷிய பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலிலும் பாரத் என்று இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இதற்கு எதிர்க்கட்சியினர் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா பெயர் மாற்றம் குறித்து பாஜ அமைச்சர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் இந்திய நாட்டின் பெயர் மாற்றம் தொடர்பாக கோரிக்கை வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என ஐநா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெசின் துணை செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறியதாவது, “உலக நாடுகள் நாட்டின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் அதை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலிக்கும். கடந்த வருடம் ‘துருக்கி‘யின் பெயரை ‘துருக்கியே‘ என மாற்றம் செய்ய அரசிடமிருந்து முறைப்படி கோரிக்கை வந்தது. அதையேற்று பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் இந்தியாவின் பெயர் மாற்றம் பற்றி முறையாக கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்” என்று கூறியுள்ளார்.

The post ‘இந்தியா’ நாட்டின் பெயர் ‘பாரத்’ என மாற்றம் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்: ஐக்கியநாடுகள் சபை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: