கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.. கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!: நாளிதழுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல் என்று அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அறிந்துக்கொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்திருக்கிறது.

தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள ஜிசிசி பழைய பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். நாடு முழுவதும் இந்த திட்டம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இன்று ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.. கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!: நாளிதழுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: