கடலூர்: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண், நெடுஞ்சாலை, சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட 26 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் அனைத்து துறைகளின் நிலைபாடு புகார் குறித்த நடவடிக்கை, தரமான பணிகளை மேற்கொள்ளுதல், பணிகளை குறிப்பட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினர். கடந்த 6 மாதத்தில் ஊடகங்கள் வாயிலாக வெளியான சுமார் 250 புகார்கள்,கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில திட்டங்களில் தொய்வு உள்ளது. அந்த திட்டங்களை விரைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளதாகவும்,கடலூர் மாவட்டத்தில் பல பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது.அது தொடர்பாக விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அரசின் அனைத்து திட்டங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
The post தொய்வாக செயல்படும் திட்டங்களை விரைந்து முடிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.
