அரியலூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

அரியலூர், ஆக.27:அரியலூரில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அரசை முனியாண்டி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜா, மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்கிட வேண்டும். ஊராட்சி கணக்கு எண் 2 இல் உள்ள உபரி நிதியை எந்த நிபந்தனையும் இன்றி ஊராட்சி பொதுக் கணக்கு எண் 1 க்கு வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிக்கு தேவையான மின் விளக்கு, குழாய்கள், குப்பைத் தொட்டி, பேட்டரி வண்டி, ட்ரே சைக்கிள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட உபகரணப் பொருள்கள் அனைத்தும் ஊராட்சி நிதி நிலைக்குத் தக்க ஊராட்சி நிர்வாகமே கொள்முதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், ஆடு,மாடு, கொட்டகை பயனாளிகள் தேர்வு செய்ய ஊராட்சி மன்றம் மற்றும் கிராம சபை தீர்மானங்களின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகமே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிக்கான இ-டெண்டரை அந்தந்த ஊராட்சிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

The post அரியலூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: