போபால்: மத்தியபிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அமைச்சரவையை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விரிவாக்கம் செய்துள்ளார்.
அதன்படி ராஜேந்திர சுக்லா(59), கவுரி சங்கர் பிசென்(71) மற்றும் ராகுல் லோதி(46) ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 3 பேருக்கான இலாக்காக்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள கர்காபூரில் இருந்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பிராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் லோதி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இவர் பாஜ மூத்த தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் அமைச்சருமான உமா பாரதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தேர்தல் நெருங்கும் நேரத்தில் ம.பி அமைச்சரவை விரிவாக்கம் appeared first on Dinakaran.
