*அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கி ஓடினர்
திருமலை : திருப்பதி- அதிலாபாத் இடையே செல்லும் கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் திடீர் புகை கிளம்பியதால் பயணிகள் பீதியடைந்து அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து தெலங்கானா மாநிலம் அதிலாபாத் நோக்கி கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் ரயில் (17405) பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 5.45 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், வெங்கடகிரி ரயில் நிலையம் அருகே சென்றபோது ஏ.சி பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனை கண்ட ரயில் பயணிகள் பீதியடைந்து அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
சிலர் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே இறங்கி தூரமாக ஓடிச்சென்று நின்றனர். பின்னர், இஞ்ஜின் துணை லோகோ பைலட் மற்றும் ஊழியர்கள் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட ஏசி பெட்டிக்கு சென்று ஆய்வு செய்து, பிரேக் பிடித்து கொண்டதால் உராய்வு அதிகம் ஏற்பட்டு புகை வெளியேறியதாக தெரிவித்தனர். பின்னர் அதனை சரி செய்த பின்னர் ரயில் சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் ஆபத்தை உணர்ந்து அபாய சங்கிலியை இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
The post திருப்பதி- அதிலாபாத் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் புகை கிளம்பியதால் பயணிகள் பீதி appeared first on Dinakaran.
