தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சி: அமைச்சர் பெருமிதம்

சீர்காழி: தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சி நடப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மனைவி சாந்தியுடன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் 918 திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்டுள்ளது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சிபுரம் மாவட்டம் தீதாஞ்சேரி கோயில் 150 ஆண்டுகளுக்கு பிறகும் குடமுழுக்கு கண்டுள்ளன. இதுபோன்று 918 கோயில்களில் நூறு ஆண்டுகள் கடந்த 30க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்ட வரலாறு தமிழ்நாடு முதல்வரின் ஆன்மிக ஆட்சியில் நடைபெற்றுள்ளது.

அதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் 23 கோயில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. சட்டைநாதர் திருக்கோயில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம்தான் குடமுழுக்கு நடைபெற்றது. ஒட்டு மொத்தமாக இந்த ஆட்சி ஒரு ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சியாக உள்ளது. ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள், மடாதிபதிகள், சந்நிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கும் மகிழ்ச்சி கலந்த ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சி: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: