தாரமங்கலம், ஆக.24: தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் கீர்த்திகா(25). கருக்கல்வாடி கிராமம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(27). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்தனர். சிறிது நாட்களில் கஜேந்திரனுக்கு, கீர்த்திகா வேறு ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வாட்ஸ்அப்பில் வந்தது. இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில், கீர்த்திகா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவர் சந்தேகப்பட்டு துன்புறுத்துவதாக புகார் அளித்தார். இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு சிறிது நாட்கள் ஒன்றாக இருந்த இருவரும், பிறகு பிரிந்து அவரவர் பெற்றோர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். அப்போது கஜேந்திரன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கீர்த்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர்களது திருமணத்தின் போது, கீர்த்திகாவின் தோழியாக வந்த நங்கவள்ளி அருகே உள்ள சென்ட்ரெட்டியூர் காலனியைச் சேர்ந்த நந்தினி(24) என்பவருடன் கஜேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து நந்தினியின் பெற்றோர், நங்கவள்ளி போலீசில் காணாமல் போன மகளை மீட்டுத் தருமாறு புகார் அளித்தனர். அதன் பேரில் இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று ஓமலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த முதல் மனைவி கீர்த்திகா, தனது உறவினர்களுடன் கணவர் வீட்டுக்கு சென்று கேட்டபோது, அவர்கள் ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக பேசியுள்ளனர். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்த கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாரமங்கலம் போலீசில் தனது 6 மாத குழந்தையுடன் கீர்த்திகா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கஜேந்திரன் மீது, வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post மனைவியின் தோழியை 2வது திருமணம் செய்த வாலிபர் appeared first on Dinakaran.