வாரம் 30 கண்டெய்னரில் இலங்கைக்கு ஏற்றுமதியாகும் நாமக்கல் முட்டைகள்

*பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு வாரத்துக்கு 30 கன்டெய்னர்கள் மூலம் சுமார் 1.40 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை தொழில் பிரதான ஒன்றாக உள்ளது. இங்கு, சிறியதும்- பெரியதுமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் 5 கோடி முட்டைகள் வரையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

என்இசிசி மூலம் நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் குடிசை தொழிலாக இருந்த கோழிபண்ணை தொழில் தற்போது பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. பல லட்சகணக்கான தொழிலாளர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த தொழிலில் இடுபட்டு வருகிறார்கள்.

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்காக முட்டை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாமக்கல் முட்டை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், குவைத் மற்றும் ஈரான், ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும், மலேசியாவுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கண்டெய்னர் மூலமாக கப்பலில் முட்டை கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, ஈரான் நாட்டில் செயல்படும் பண்ணைகள் மூலம் அரபு நாடுகளுக்கு தரைவழி மார்க்கமாக முட்டைகள் கொண்டு செல்லப்படுவதால், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது.

அதே நேரத்தில் இலங்கைக்கு தங்கு தடையின்றி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மாண்டலத்தில் இருந்து வாரத்திற்கு 30 கண்டெய்னர்கள் வரையிலும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கண்டெய்னர் ஒன்றில் 4.72 லட்சம் முட்டைகள் வரை அனுப்பப்படுகிறது. அதன்படி வாரம் ஒன்றுக்கு நாமக்கல்லில் இருந்து இலங்கைக்கு சுமார் 1.40 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு பருவ நிலை மாறியும், வெப்பம் அதிகரித்தும் காணப்படுகிறது. இதனால் முட்டை உற்பத்தி சற்று குறைந்துள்ளது. வழக்கமாக ஆடி மாதத்தில் முட்டை ஏற்றுமதி மற்றும் நுகர்வு சற்று குறைவாக இருக்கும், இதனால் முட்டை விலை குறைந்திருக்கும்.

ஆனால் இலங்கைக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சகஜமாக உள்ளது. முட்டை விலை நிலையானதாக உள்ளதாலும், ஏற்றுமதி குறையதாதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post வாரம் 30 கண்டெய்னரில் இலங்கைக்கு ஏற்றுமதியாகும் நாமக்கல் முட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: